அவன் திருடனல்ல

காற்று மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் மாலைநேரம். அந்தக் கிராமத்திற்குத் தெற்கே ஓதுக்குப் புறமாகக் காணப்படும் மயானத்தில் எரியூட்டப்பட்ட சிதையிலிருந்து கிளம்பிய செந்நிறமான தீச்சுவாலைகள் மெல்லமெல்ல மேலெழும்பி எரியத் தொடங்கியது. அந்தச் சிதைக்குப் பக்கத்திலுள்ள மரங்களின் பச்சை இலைகள் நெருப்பின் சூட்டில் சடசடவென்று பொசுங்கிக் கொண்டிருந்தன. அந்த மயான அமைதியில் கேட்டுக் கொண்டிருந்த ஒரே சப்தம், நெருப்பின் சப்தம்தான். இலைகள் மட்டும் பொசுங்கிக் கொண்டிருக்கவில்லை அந்த நெருப்பில், இருபது வயதுக்கும் மேலான இறந்துபோன இளைஞனின் உடலும்தான். வழக்கமான சடங்குகள் வேறு எதுவும் அங்கே நடைபெறவில்லை. சிதையைச் சுற்றி நின்று கொண்டிருந்த முப்பது முப்பத்தைந்து பேர்களில் யாரும் கண்ணீர் விடவோ, கதறி அழவோ செய்யவில்லை. ஆனாலும் சிதை எரியத் தொடங்கி நீண்டநேரம் ஆனபோதும் யாருமே அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தனர். அமைதியாக, ஆனால் ஆணியடித்ததைப் போல அவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால், ஏதோ நெருப்பிடம் அவர்கள் பாவமன்னிப்பு கேட்பதுபோல் இருந்தது. அந்த இறுக்கமான சூழலையும், அங்கே நிலவிய மெளனத்தையும் கலைத்தது ஆசிரியர் சிலுவைமுத்துவின் குரல். சரி வாங்கய்யா எல்லாரும், பக்கத்து வயக்காட்டுல பம்ப்செட் ஓடுது, ம் சரிசரி வாங்க குளிச்சுட்டு கெளம்பலாம் என்றதும், அந்தச் சிறிய ஆனால் அழுத்தமான கூட்டம் மெதுவாக நகரத் தொடங்கியது.

அந்த வயக்காட்டின் மையப்பகுதியில் இருக்கும் பம்ப்செட்டை நோக்கி, வரப்பின் வழியாக ஒருவர்பின் ஒருவராக நடந்துசெல்கின்றனர். ஆசிரியர் சிலுவைமுத்து முன்னால் செல்ல, எதுவும் பேசாமல் எறும்புகளைப் போல வரிசையாகச் சென்று கொடிருக்கின்றனர். எல்லோருடைய மனதிலும் அதோ எரிந்து கொண்டிருக்கின்றானே, அந்த இளைஞனை பற்றிய நினைவுகள் ஒடிக் கொண்டிருக்கின்றன. யார் அவன்? எங்கேயிருந்து வந்தான்? அவனுடைய அப்பா, அம்மா இருக்கிறார்களா? யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன்? இருபது வருடத்திற்கும் மேலாகப் பரிச்சயமுள்ள அந்த இளைஞனின் பெயரைக் கூட யாரும் அறிந்திருக்கவில்லை. குழந்தைகளும் பெண்களும் அவனுடைய தோற்றத்தைப் பார்த்து அழுக்கன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அழுக்கன் என்பதே அவனுடைய பெயராகிப் போனது. அந்த அழுக்கனைத்தான் இப்போது நெருப்பு சுட்டெரித்து சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து இன்று இந்த ஊரை மட்டுமல்ல, உலகத்தை விட்டே சென்றது வரையிலும் நினைத்துப் பார்த்துக்கொண்டே நெருங்கி விட்டார்கள் பம்ப்செட் ஒடிக்கொண்டிருக்கும் இடத்தை. யாரும் உடைகளைக் களையவோ, குளிக்கத் தொடங்கவோ முற்படவில்லை. சிந்தனையில் ஆழ்ந்தவர்களாக அப்படி அப்படியே உட்கார்ந்து கொண்டார்கள். அழுக்கனை பற்றிய நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.

ஒரு பத்து வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அவன் நம்ம ஊருக்கு வந்தப்ப. அப்பல்லாம் எனக்குத் தெரிஞ்சு ஊருக்குள்ளயே வரமாட்டான். கெழக்க அந்தப் பிள்ளையார் தோப்பு, அந்தக் காளியம்மன் கோயிலு, அப்புறம் இந்தக் கம்மாய். இங்கதான் இருப்பான். எங்கிட்டாவது கிடந்து பழைய துணிமனிகளை எடுத்து சேத்து வச்சிப்பான். எப்பவும் நாலஞ்சு சட்ட, கீழே ரெண்டு பேண்டு இதோடதான் திரிவான். குளிக்கமாட்டான், ஒன்னு செய்யமாட்டான். யாருகிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசவும் மாட்டான். எப்பவாது ஊருக்குள்ள வந்து வீட்ல இருக்க பொம்பளககிட்ட சோறு கேப்பான். ஆனா அவன் இருக்க கதியப் பாத்து யாரும் குடுக்க மாட்டேன்னு விரட்டி விட்ருவாங்க. ஏன் நம்ம குழந்தககூட அவனப் பார்த்தா அழுக்கா, அழுக்கான்னு கத்தி கூப்பாடு போட்டுகிட்டே, அவன்மேல கல்லெறியவும், கம்புக்கட்டைய எடுத்து அடிக்கவும் செய்வாங்க. அவனுக்கு அது வெளயாட்டாத் தெரியுமோ என்னமோ சிரிச்சுக்கிட்டேதான் இருப்பான். அந்தச் சின்னப் புள்ளகளோட விளையாடுறது அவனுக்குப் பிடிக்கும் போல. அப்புறம் கொஞ்சங் கொஞ்சமா களவாங்க ஆரம்பிச்சான். அங்க அத எடுத்துட்டான், இங்க இத எடுத்துட்டான்னு எல்லோரும் சொல்வாங்க. சிலநேரம் புடிச்சு நல்லா மொத்தவும் செய்வாங்க. அப்பவும் பேசமாட்டான், சிரிச்சுக்கிட்டேதான் இருப்பான். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவன் களவாண்டதெல்லாம் வெறுஞ் சோத்துச் சட்டியத்தான். எல்லாரும் தூங்கினதுக்கப்புறம், சாப்பிட்டு தண்ணி ஊத்தி வச்சிருக்கிற மீதிச்சாப்பாட்டை சட்டியோட தூக்கிகிட்டு போயிருவான். சாப்பிட்டு முடிச்சதும் சட்டியை தெருவுல போட்டுட்டு போயிறுவான். ஒரு டைப்பான ஆளுதான் அவன். அந்தச் சோத்துச்சட்டிப் பக்கத்தில ஒரு ஆயிரரூவாத் தாள வச்சிருந்தாக் கூட அத எடுக்கமாட்டான். நமக்கெல்லாம் அவன் எந்தத் தொல்லையையுமே குடுத்ததில்லை. கொஞ்சம் நல்லதுதான் செஞ்சிருக்கான்.”கிழிஞ்சு கந்தலாகிப் போன துணிமணிகளைப் போட்ருந்தாலும் அவன் மனசு என்னமோ எல்லாத்தையும் விட மேலதான்”.பெரியவர் முனியாண்டி சொல்லி முடிக்கும் போது இதயம் கனத்துப் போனது, அவருக்கு மட்டுமல்ல.

ஆமாங்கய்யா நீங்க சொல்றது சரிதான்.அவன் ஒடம்பும், ஒடயும் தான்யா அழுக்கு. அவன் மனசு அவ்ளோ நல்ல மனசுய்யா. இன்னிக்கு வண்டில அடிப்பட்டு ரோட்டோரமா அனாதமாதிரி செத்துக்கிடக்கான். ஆனா அவன் மட்டும் இல்லன்னா என் மகன், ஒரேஒரு மகன் என்னிக்கோ செத்துப் போயிருப்பான். அன்னிக்கு நடந்தது இப்பவும் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்குது. நம்ம ராசாவோட தோப்புக்கு வேலக்கிப் போய்ட்டு திரும்பி வர்றதுக்கு எட்டு மணி ஆயிருச்சு. சோறுகீறெல்லாம் செஞ்சுமுடிச்சுட்டு கைக்குழந்தையோட எனக்காகக் காத்திட்டுருந்தா என் பொஞ்சாதி. போனதும் குளிச்சிட்டு நல்லா சாப்பிட்டு படுத்துட்டோம். குழந்தைய நடுவுல படுக்க வச்சுக்கிட்டு தட்டிக்கொடுத்துக்கிட்டே நாங்க ரொம்பநேரம் பேசிக்கிட்ருந்தோம். குழந்தையும் நல்லா தூங்கிடுச்சு. நானும் வேல செஞ்சிட்டு வந்த அசதில அப்படியே தூங்கிட்டேன். நல்ல நடுச்சாமத்துல எம் பொஞ்சாதி போட்ட சத்தத்துலே தடபுடன்னு எந்துரிச்சுப் பார்த்தா அய்யொய்யோ! அவ்ளோ பெரிய பாம்பு குழந்தையை சுத்திக்கிட்டு இருக்குது. உஸ், உஸ்ஸ்னு கத்திக்கிட்டு படம்வேற எடுக்குது. குழந்தயோ பயங்கரமா கத்துது. என்ன செய்யன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தப்ப, வெளியயிருந்து நம்ம அழுக்கன் விறுவிறுன்னு வீட்டுக்குள்ள வந்தான். சுத்துமுத்தும் பாத்தான். விருட்டுனு போயி அந்தப் பாம்போட தலய லபக்குன்னு புடிச்சான். அந்த வெசப்பாம்பு பட்டுனு வாலத்தூக்குச்சு. இன்னொரு கையில வாலயும் புடிச்சுக்கிட்டான். குழந்தைய கால்ட்ட தள்ளிவிட்டுட்டு பாம்பக் கொண்டுகிட்டு அவம்பாட்டுக்கு போயிட்டான். எங்க அப்பா, நான், எம்பொஞ்சாதி எல்லோரும் பயந்து போயி நின்னுகிட்டிருந்தோம்.ஆனா அவனுக்குப் பயமே சுத்தமா இல்ல. அப்பதான் புரிஞ்சது எனக்கு.”பயந்தாங்கொள்ளிப் படைக வேணா பாம்பப் பாத்து பயப்படும். பயப்படாத ஒரே ஒரு மனுனுக்கு பாம்பு ஒன்னும் பெரிய விக்ஷயமல்ல. ”அவனோட, இல்ல எந்தம்பியோட ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்லி முடித்தான் நடுத்தர வயதுள்ள மாடசாமி.

தலையில் கட்டியிருந்த துண்டினை அவிழ்த்து ஒரு உதறு உதறியபடி எழுந்து நின்றார் சமுத்திரம்.ம் ஆனது ஆகிப்போச்சு, விடுங்கய்யா போன உசிரு போனதுதான். திரும்பி வரப்போவதில்ல.என்ன! அவன் இருக்கும் போது அவன அழுக்கன், களவானிப் பயன்னு திட்டிட்டு இன்னிக்கு இப்படி ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கோம். என்ன தான் அவன் களவானிப் பயலா இருந்தாலும் இந்த ஊருக்காரங்க மேல பாசம்வச்ச பயலாத்தான் இருந்தாய்யா. இதோ நம்ம மாடசாமி புள்ளய பாம்புகிட்டயிருந்து காப்பாத்துன மாதிரி. ஏங்குடும்பதுக்குத்தான் உதவி செஞ்சான். பெரிய உதவிதான். முழுப்பரிட்சை லீவுக்கு இங்க வந்த என் அண்ணன் மவ, என்ன பிரச்சனையோ, ஏது பிரச்சனையோ இங்க வந்து அப்படி செய்யத் துணிஞ்சுட்டா. எல்லாரும் தூங்குன நேரம்பாத்து பக்கத்து ரூமுக் கதவப்பூட்டிக்கிட்டு தூக்குல தொங்கப் போனவள, அந்நேரம் பாத்து சோத்துச் சட்டிய எடுக்க வந்த நம்ம அழுக்கன் தான் கதவ உடச்சு,அவளக் கயித்துலயிருந்து இறக்கி, ம் என்றவாறு பெருமூச்சு விட்டுக்கொண்டார். என்னதான் களவாணிப் பயலா இருந்தாலும் நல்ல பாசக்கார பயதான் நம்ம அழுக்கன். சும்மாவா சொன்னாங்க, ”யாரும் இல்லாத ஒருவனுக்குத் தான், எல்லா உயிர்களையும் பாரபட்சம் பாக்காம நேசிக்கத் தெரியும்னு,” என்ற சமுத்திரம் குளிக்க ஆரம்பித்தார்.

திடீரென்று எல்லோருடைய பார்வையும் ஆசிரியர் சிலுவைமுத்துவை நோக்கித் திரும்பின. ஒவ்வொருவராக எழுந்து அவரின் பக்கத்தில் நெருங்கிச் சென்றனர். அவரோ அழுது கொண்டிருந்தார். ஒரு சின்னக் குழந்தயப் போல. ஒய்வுபெற்ற இந்தக் காலம் வரையிலும் தன் குடும்பத்துலயும், இந்த ஊர்லயும் எத்தனையோ சாவுகளைப் பார்த்திருந்தவர், யாரும் இல்லாத இந்த அனாதைப் பையனின் சாவுக்கு இப்படி அழுகிறாரே என்று நினைத்துக் கொண்டு அவரைச் சுற்றி நின்றிருந்தனர். குளித்துக் கொண்டிருந்த சமுத்திரம் கூட ஈரத்தோடு வந்து ஆசிரியரின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். படிச்ச பெரிய மனுசன், பல விசயம் தெரிஞ்ச மனுசனாச்சேன்னு யாரும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவரே ஒருவாறு தன்னைச் சரிசெய்துகொண்டு பேச ஆரம்பித்தார். அவன் செத்துப் போனதுக்காகக்  கூட நான் அழலய்யா. நம்மளோட தவறுகளை நினச்சுப் பார்த்துதான் அழுகிறேன்.

நாம எல்லோருமே அவங்கிட்ட, அநியாயமாத்தான் நடந்துக்கிட்டோம் இல்லியா. நீங்க சொன்னீங்களே ஆளுமாத்திஆளு ஒவ்வொண்ணா, அப்படி அவன் நமக்கு நல்லது செஞ்சும் கூட நாமளும், நம்ம வீட்டுப் பொம்பளகளும் ஒருநாள், ஒருவேளை அவனுக்குச் சோறுபோட்டதில்ல. நமக்கு அவன் செஞ்சதுக்கு நாம செஞ்ச கைமாறு இதுதான். அப்படிப் பாத்தாலும் அவன் பணத்தையோ, பொருளையோ ஒரு நாளும் திருடல. வெறுஞ்சோறுதான் அதுவும் நாம சாப்பிட்டது போக தண்ணியூத்தி வச்சிருந்த மிச்சச்சோறுதான். அதயும் நாம குடுக்கல, அவனா எடுத்துக்கிட்டான். பாவம் என்ன தான் செய்வான். ஆனா அந்தத் தப்புக்கே அவனத் தண்டிச்சோம், தனிமைப்படுத்தினோம். ஆனா இந்த ஊரு, ஒலகத்துல பாருங்க எவ்வளவு தப்புக, எவ்வளவு திருட்டுக நடக்குதுன்னு, சரி அவ்வளவு ஏன் உங்க விசயத்துக்கே வருவோமே, அதான் உங்களுக்கு வேலகுடுக்கிறானே பெரிய மனுசன் ரொம்ப நல்லவனா என்ன? உங்க நிலத்த திருடல?உங்க உழைப்ப திருடல?உங்க நேரத்தை திருடல?ஏன் நம்ம  அசந்தா நம்ம வீட்டுப் பொம்பளகளோட கற்பத் திருடல?

இதோ நாடு சுதந்திரமடஞ்சு எவ்வளவோ காலம் ஒடிப்போச்சு இன்னும் உடம்புல ஒரு சட்ட கூட போடாமா சுத்திகிட்டு இருக்கீங்க. வாழ்க்கை? என்னத்தச் சொல்ல நாளெல்லாம் வேல மட்டும் பாக்கிறீங்க. இதுக்கெல்லாம் என்ன காரணம் மேல சொன்ன திருட்டுதான. நம்ம அழுக்கன் திருடனல்ல. அவனொன்னும் திருடனல்ல. நம்மளசுத்தி நடக்குது பாருங்க அதெல்லாந்தான் திருட்டு. அவனுக எல்லாந்தான் திருடனுக. ஆமா நம்ம ஓட்டுப்போட்டு பதவில ஒக்கார வச்சமே அந்த மந்திரிகளையும், அமைச்சர்களையும் பார்த்தா அடேயப்பா! ராஜ வாழ்க்கைதான் அவங்களோடது. போட்டி போட்டுக்கிட்டு கோடிகோடியா சுருட்றாங்க பாருங்க. “ஊழல்”அது இதுன்னு இவனுக கத்திக்கிட்டு கிடக்கட்டும் அது களவாணித்தனம் தான. ஆனா இவனுகளையெல்லாம் நாம ஐயா, சாமி, துரையே, சாரேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கோம். ஆனா நம்ம அழுக்கன அடிச்சோம், வஞ்சோம், வெரட்டுனோம், பரிகாசம் பண்ணோம். அவன் யாரு? எங்கேயிருந்து வந்தான்? ஆனா இன்னிக்கு நம்ம மனசெல்லாம் நிறஞ்சிருக்கான். அதுக்கு அவன் செஞ்சது என்ன?ஒண்ணே ஒண்னுதான் நல்லது பண்னான்.கெட்டது செய்யல.

இந்த ஒலகத்துல எந்த மனுசனும் தேவையில்லாமப் பிறக்கிறதில்ல. நம்ம அழுக்கனும் கூட நமக்காகப் பிறந்தான்னு நினச்சுப்போம். வாழ்க்கைங்கிறது என்ன?ஒருத்தங்களுக்கு ஒருத்தர் உதவுறதும் அன்பாயிருக்குறதும் தான. பாருங்க யாரும் இல்லாத ஒருத்தனுக்கு நாம இத்தன பேரு துக்கப்பட்டுட்டு இருக்கோம். குடும்பமா இருக்கிற நாம நாளக்கி செத்துப்போனா நினைச்சுப் பாருங்க, இன்னிக்கு நாம இருக்கிற மாதிரி எத்தனபேரு இருப்பாங்கன்னு. அவன் செஞ்சான் நாம வந்திருக்கோம். நாமளும் செய்றதைப் பொருத்துதான நமக்கும் வருவாங்கன்னு சொல்லிக்கொண்டே தொட்டியிலிருந்த தண்ணீரை அள்ளி முகம் கழுவிக்கொண்டு, தொட்டிக்குள் இறங்கினார். திரும்பிப் பார்த்தார் அந்தப்பக்கம், எரியவுமில்லை, புகையவுமில்லை எல்லாம் அடங்கியிருந்தது. தொட்டிக்குள் மூழ்கிக் குளித்துவிட்டு வெளியே வந்தார். மனசுக்குள் ஏதோ எரியத் தொடங்கியது. இருட்டிவிட்டது. அழுக்கனை,”வழியனுப்ப வந்தவர்கள் இருட்டிலும் கூட தங்கள் வழிகளை சரியாகக் கண்டுபிடித்து நடந்து செல்கிறார்கள்”.

ஜோசப் ராஜா

02.01.2011

Related Articles

Leave a Comment