அடர் கருப்பாக இருக்கும் மேகத்தை அண்ணாந்து பார்த்தபடி தன்னுடைய வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் பெரியவர் சின்னச்சாமி. அவரை அறியாமல் அவருடைய உடலுக்குள் ஒருவித நடுக்கம் புகுந்திருக்கிறது என்பதைக் கடகடவென்று ஆடிக்கொண்டிருக்கும் அவருடைய கைவிரல்களில் தெரிந்து கொள்ள முடிகிறது. வேகமாக வீட்டிற்குள் சென்றவர், வாசலில் வைத்திருந்த மூட்டையை மாடிக்குத் தூக்கிச் செல்கிறார். ஒரு படுக்கை அறை இருக்கும் மாடி வீட்டில் ஏற்கனவே கீழே இருந்து கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களை அங்கும் இங்குமாக அடைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய மனைவியும் மருமகளும்.
அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் மகனை அடிக்கடி திட்டுவதற்கு மறப்பதில்லை அவர். அந்த வீட்டில் அவரை மிரட்டக்கூடிய அவருடைய பேரனின் அதிகாரமும் இன்று செல்லுபடியாகமல் இருக்கிறது. எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் அவனும்கூட அவர் சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்து கொண்டிருக்கிறான். அடுத்த பொருளை எடுப்பதற்குக் கீழே செல்பவரின் முதுகிற்குப் பின்னால் நின்றபடி, ”இப்ப என்ன அவசரம்னு இப்டி கெடந்து குதிக்கிறீங்க? என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டு அப்புறமா” என்று அவர் மனைவி பேசி முடிப்பதற்குள், வேகமாகத் திரும்பிய சின்னச்சாமி அவளை முறைத்துப் பார்க்கிறார். இத்தனை வருட தாம்பத்தியத்தில் இதுகூடவா தெரியாமல் இருப்பாள், ”போயா கெழவா” என்று முனகிக்கொண்டே வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறாள் அவள்.
”இந்த மனுசனுக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருச்சா என்னான்னு தெரியல, காலைல இருந்து கெடந்து துள்ளிக்கிட்டு கெடக்காரே, இந்நேரம் பாத்து ரமேஷ் ஊர்ல இல்லாம போய்ட்டான், அவன் இருந்திருந்தா இந்தத் தொல்லை இல்லாம போயிருக்கும்” என்று ரஞ்சிதம் தன்னைப்பற்றி மருமகளிடம் பேசுவதைக் கேட்டுக்கோண்டே கீழே வருகிறார் சின்னச்சாமி. வானம் மெல்லத் தூறல் போடத் தொடங்குகிறது. நடுங்கும் விரல்களை நீட்டி தூறலை ஏந்திக்கொள்கிறார். ஞாபகம் வந்தவராகக் கைகளைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றவர் புகைப்படங்கள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் பையை மெல்லத் தூக்குகிறார். கருப்பு வெள்ளையில் மனைவியோடு எடுத்த புகைப்படத்தை வாஞ்சையோடு தடவிப்பார்க்கிறார். ரஞ்சிதம் மாடியில்தான் இருக்கிறாள், ஆனாலும் புகைப்படத்தில் இருக்கும் இளம் ரஞ்சிதத்தை அன்பொழுகப் பார்த்துக் கொண்டிருந்த சின்னச்சாமி, மழையின் சத்தம் அதிகமாகக் கேட்கவும் வேகமாக மாடிக்குச் செல்கிறார்.
மழை உக்கிரமாகப் பெய்யத் தொடங்குகிறது. மனைவியும் மருமகளும் பேரனும் மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ”பாத்தியா மழை வந்திருச்சு பாரு” என்று சொல்லிக்கொண்டே புகைப்படங்கள் இருக்கும் பையைக் கீழே வைத்தவர், ”ஏன் ரஞ்சிதம் பத்திரமெல்லாம் இருக்கிற கவர கட்டில்ல வச்சேனே எடுத்தியா” என்று கேட்க, எடுக்கவில்லை என்று தெரிந்தும் தேடுவதுபோலத் தேடிவிட்டு உதட்டைப் பிதுக்கி இல்லை என்பதுபோலப் பாவனை செய்கிறாள் ரஞ்சிதம். குடையைப் பிடித்தபடி பெருமழையில் மாடியிலிருந்து இறங்கி வருகிறார். தெருவில் தண்ணீர் தேங்கத் தொடங்குகிறது. சாக்கடையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் அளவைப் பார்த்துக்கொண்டே பத்திரங்களைப் பத்திரமாகக் கையில் வைத்துக்கொண்டு, கதவைப் பூட்டிவிட்டு மாடிக்கு செல்கிறார் சின்னச்சாமி.
மதியநேரம் போலத் தெரியவில்லை. நடுநிசியில் மழைபெய்வது போலிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளிருக்கும் மழையையும் தெருவையும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ”இப்படித்தான் எட்டு வருசத்துக்கு முன்னாடி பேய்மழை பேஞ்சிச்சி. அதோட சேத்து ஏரியையும் மொத்தமாத் தொறந்து வுட்டுனானுங்க அன்னிக்கி ஆட்சில இருந்த அறிவாளிங்க. கீழ வூட்டுக்குள்ள, ஏன் ஒசரத்துக்குத் தண்ணி வந்துருச்சு. அப்ப மாடில இந்த வீட்டக் கட்டல, அதுனால ஒத்தப் பொருளையும் காப்பத்த முடியல. பொழச்சாப் போதும்னுட்டு பக்கத்து வீட்டு மாடிலதான் ரெண்டு நாளாக் கெடந்தோம்” என்று சின்னச்சாமி சொல்லிக் கொண்டிருப்பதை மருமகளும் பேரனும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ”வெள்ளம் வந்த அந்த ராவெல்லாம் வீடுகட்ற வேலைக்காக அக்கம்பக்கத்துல தங்கியிருந்த வடநாட்டு தொழிலாளிங்க காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திட்டே இருந்தது இன்னும் எனக்குக் கேட்டுட்டே இருக்கு” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது கீழே இருந்து ரஞ்சிதம் சாப்பிட அழைத்த சத்தம் கேட்டதும் மூவரும் படியிறங்கினார்கள். ”பதட்டத்துல இருக்கும்போதுதான் பசி அதிகமா இருக்கு இல்ல” என்று சின்னச்சாமி சொன்னதை ஆமோதித்தபடி இறங்கிச் சென்றாள் மருமகள்.
சாப்பிட்டுக் கொண்டே ”ஏன் ரஞ்சிதம் எல்லோருமாச் சேந்து மீதி இருக்கிற பொருளையும் மேல ஏத்திரலாமா” என்று கேட்கிறார் சின்னச்சாமி. ரஞ்சிதம் பதில் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க. கொஞ்சம் யோசித்தவர் ”சரி வேண்டாம், எல்லாம் கனமான பொருளுங்க நீங்க தூக்கிக்கிட மாட்டீங்க” என்று சொல்லிக்கொண்டே கையைக் கழுவிட்டு வாசலுக்குச் சென்று மழையைப் பார்க்கிறார். ”மழைபேஞ்சா மகிழ்ச்சியா இருந்த காலமெல்லாம் போச்சு, மழையக் எமைகொட்டாம ரசிச்ச காலமெல்லாம் போச்சு, இப்பல்லாம் எங்கிட்டுக்கூடி தண்ணி வரும்னு பயந்து சாக வேண்டியிருக்கு” என்று சின்னச்சாமி சொன்னதை யாருக்கும் கேட்க விடவில்லை மழை. சாப்பிட்டு முடித்து மூவரும் தாயம் விளையாட ஆரம்பிக்க, சின்னச்சாமி குடையோடு வெளியே கிளம்பினார். ”என்னாத்துக்கு வெளிய போறீங்க” என்று ரஞ்சிதம் அதட்ட, ”வந்துர்ரேண்டி, தோ ஆத்தப்பாத்துட்டு வந்துர்ரேன்” என்று சொல்லிவிட்டு மெல்ல நடக்கத் தொடங்கினார். சென்னையில் வசிப்பவர்களுக்கு அடையாறு கூவமெல்லாம் மழைக்காலத்தில் மட்டும்தான் ஞாபகம் வரும். மக்களுக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்கும் அப்படித்தான். வருடமெல்லாம் கழிவுநீர்க்கால்வாய் போல ஓடிக்கொண்டிருக்கும் அடையாறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. என்ன அவசரமோ ஆற்றுக்கு, அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
”மெழுகுவத்தி வெளிச்சத்தில எவ்ளோ நேரம் ஒக்காந்ந்துட்டு இருக்கிறது பேசாம படுக்கலாம்” என்று ரஞ்சிதம் சொன்னதும் மருமகளும் பேரனும் தூங்க ஆயத்தமானார்கள். கைப்பேசியில் இருக்கும் விளக்கால் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. ”தாத்தா வெள்ளம் வந்தா எழுப்பிவிடு, மறந்துராத” என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றான் பேரன். ”சரிடா போய்த்தூங்கு” என்று சொல்லிவிட்டு அந்த இருளிலும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. ”தண்ணி வந்தாப் பாத்துக்காலாம்ங்க, அதான் மாடி இருக்குல்ல, பேசாமத் தூங்குங்க, எவ்வளோ நேரம் தெருவப் பாத்துக்கிட்டே இருப்பீங்க?” என்று ரஞ்சிதம் சொன்னதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை சின்னச்சாமி. அதிகாலை இரண்டுமணிக்கு மேல் மீண்டும் குடையை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கிச் சென்றார், வீட்டிலிருந்து கொஞ்சதூரம்தான் நடந்திருப்பார். கால்கள் நனைந்ததை உணர்ந்து திடுக்கிட்டபடி கைப்பேசியில் விளக்கை எரியச்செய்து பார்த்தார். ஆறு தன்னுடைய அகலத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. ஆற்றங்கரை ஓரமாகக் குடியிருந்த சிலர் கையில் எடுக்க முடிந்த பொருட்களோடு தண்ணீரில் மிதந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
பிரபலமான கட்டுமான நிறுவனங்கள் எல்லாம் ஆற்றங்கரையை வளைத்துப்போட்டு வானுயரக் கட்டிக்கொண்டிருந்த கட்டிடங்கள் ஆற்றில் மிதந்து கொண்டிருந்ததைப் பார்க்க உண்மையிலேயே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் பண முதலைகளுக்காகத்தான் இந்த ஆற்றங்கரை ஓரமாக பலவருடங்களாக குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி துரத்தியடித்தது அரசாங்கம். இதோ பேராசை பிடித்த பண முதலைகளின் ஆக்கிரமிப்பிற்குச் சாட்சியாக விரிந்து நிற்கிறது ஆறு. பேராசை பிடித்த இந்த உலகம் அழிவைத் தவிர வேறெதையும் விரும்புவதில்லை என்பதை நினைக்கவே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதையெல்லாம் அசைபோட்டுக்கொண்டே மெல்ல நடந்து வீட்டிற்கு வந்தார் சின்னச்சாமி. தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும், மருகளையும், பேரனையும் பார்த்தார். போர்வையைப் போர்த்தியபடி மீண்டும் வாசலில் உட்கார்ந்து மழையைப் பார்க்கத் தொடங்கினார்.
அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் மழை மெல்லக் குறையத் தொடங்கியது. வானத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. மழை மேகங்கள் விலகத் தொடங்கியிருந்தன. எங்கெங்கோ அடைபட்டிருந்த பறவைகள் பறக்கத் தொடங்கியிருந்தன. மீண்டும் அவசரமாக ஆற்றை நோக்கி நடக்கத் தொடங்கினார். நல்ல வேளையாகக் கடைசியாக அவர் பார்த்த இடத்தைத் தாண்டி தண்ணீர் வரவில்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது. திரும்பி அவர் வீட்டிற்குச் செல்லும்போது மழை இல்லாமல் இருந்தது. இன்னும் யாரும் எழுந்திரிக்கவில்லை. எழுந்துமட்டும் என்ன செய்யப் போகிறார்கள், தூங்கட்டும் என்று நினைத்துக் கொண்டே களைப்பாகக் கட்டிலில் படுத்தார் சின்னச்சாமி. வெள்ளம் வந்த பழைய அனுபவத்தையும், நெருங்கி வந்த புதிய அனுபவத்தையும் அசைபோட்டபடி படுத்துக் கிடந்தார். எங்கிருந்து தான் வந்ததோ! அவரைத் தழுவிக் கொள்வதற்காகவே காத்திருந்தது போல ஆரத் தழுவிக்கொண்டது தூக்கம்.
அனுபவம் என்பது சிலநேரங்களில்தான் பாடமாக இருக்கிறது. பலநேரங்களில் பதட்டத்தையே அதிகரிக்கச் செய்கிறது, என்பதை நினைத்துக்கொண்டே தூங்கிப்போனார் சின்னச்சாமி. ஆழமாக அவர் இழுத்துவிட்ட அந்த மூச்சில் அவ்வளவு நிம்மதி நிறைந்திருந்தது. வீட்டில் மூவரும் எழுந்து, காலை உணவை முடித்தபோதும் கூட தூங்கிக் கொண்டுதான் இருந்தார் சின்னச்சாமி.
ஜோசப் ராஜா
1 comment
அனுபவப் பதட்டம் எனும் கவிஞர் ஜோசப் ராஜாவின் படைப்பு சிறுகதையாய் மலர்ந்திருக்கிறது.
ஒருகாலத்தில் ஏரிகள் நிறைந்த சென்னை இக்காலத்தில் கட்டிடங்கள் நிறைந்த நகரமாக மாற்றப்பட்டதன் விளைவை சம்மந்தமே இல்லாமல் சென்னை நகர மக்கள் நரகமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஒரு வீட்டின் அனுபவம் இங்கே கதையாக மலர்ந்திருக்கிறது.
வாசியுங்கள்
விமர்சனம் செய்யுங்கள்.