அதிகாரத்தின் அம்மணம்

1994 ஆம் வருடம். ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். இப்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் எங்கள் கிராமமான சிவகிரியில் எல்லோருடைய வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி நுழையாத காலமது. கொஞ்சம் வசதியானவர்களின் வீட்டிற்குள்ளிருந்து அந்தப் பெட்டியின் ஓசை கேட்கத் தொடங்கினால் போதும், அந்த வீட்டைக் கடந்து போகிறவர்களின் கால்கள் அங்கேயே நின்றுவிடும். இன்னும் சொல்லப்போனால், ஒரு இனிப்பு பலகாரத்தில் ஈக்கள் மொய்ப்பது போல அந்த வீட்டைக் கொஞ்சநேரத்தில் மொய்த்துக் கொள்வார்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள். பெரியவர்களுக்கு இருக்கும் கூச்சங்கள் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை, எந்த வீடானாலும் உரிமையாக உள்ளே நுழைந்து, அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் கண்களை ஒட்டிக்கொள்ளும் வல்லமை கொண்டவர்களாக இருந்தோம் நானும் என்னுடைய நண்பர்களும்.

அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், சாலையோரத்தில் இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தொலைந்து போயிருந்தோம். மே மாதம் என்ற திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சின்ன அறையில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் அலாதியானதுதான். அங்குதான் நட்பு பலப்படும். அங்குதான் காதல் வசப்படும். அங்குதான் அன்பு பெருகிவழியும். அந்தவகையில் அறையின் இருளில் உள்ளே என்ன நடக்கிறதென்றே தெரியாத எங்களுக்கு நிச்சயமாக வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவேயில்லை. ஏனென்றால் சினிமா என்ற மாபெரும் கலைவடிவம் எங்களை ஒன்றாகக் கட்டிப்போட்டிருந்தது. ஆனால் கதவு தட்டப்பட்ட வேகம் எங்களுக்குள் அச்சத்தை விதைத்தது உண்மைதான். என்ன நடந்தாலும் இந்தத் திரைப்படம் முடிந்தபின் நடக்கட்டுமே என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு பத்திரமாகவும், மிகமுக்கியமாக உயிரோடும் வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அடுத்த பிரச்சனையாக இருந்தது. என் நண்பன் ஒருவனை அழைத்துச்செல்ல வந்து, இழுத்துச் சென்ற அவனுடைய அம்மாவின் கண்களில் நான் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. பேரழிவின் பதட்டமும், பெருந்துயரத்தின் கவலையும் நிறைந்திருந்த அந்தக் கண்களை இப்போதும் பார்க்க நேர்வது துர்பாக்கியம்தான்.

வெளியே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இன்னும் சொல்லவில்லை அல்லவா. ஒன்றுமில்லை சாதிக்கலவரம். அப்போதெல்லாம் அடிக்கடி நடக்கக் கூடியதுதான். காலையில் ஒன்றாக வேலைக்குப் புறப்பட்டவர்கள், மாலையில் அந்தச் சாதியின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வார்கள்.  சண்டையென்றால் ஏதோ சின்ன அளவில் நடந்துமுடியும் என்று நினைத்துவிடாதீர்கள். இப்போது நான் சொல்லிக்கொண்டிருக்கும் சண்டையில் இரண்டு சமூகங்களின் பக்கமும் குறைந்தது பதினைந்திலிருந்து இருபது மனிதர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிகை அதைவிடவும் இரண்டு மடங்காக இருக்கும். தெருக்களில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு இடையில் இருக்கும் கோடி என்று சொல்லப்படும் இடைவெளியின் வழியாகப் பூனையைப் போன்ற எச்சரிக்கை உணர்வோடு பயணித்துக் கொண்டிருக்கும் போதே, அரங்கேறி இருக்கும் அவலத்தின் அளவென்ன என்பதை ஓரளவு புரிந்துகொண்டேன்.

நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஊராக இருப்பதால், சாலையில் வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றன வாகனங்கள். ஒவ்வொரு வண்டிக்குள்ளும் ஓராயிரம் பதட்டங்களும், படபடப்புகளும் நிறைந்திருக்கின்றன. அதுவரையிலும் விவசாய வேலைகளுக்கும், கல்லுடைக்கும் வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் எல்லாம் திடீரென்று ஆயுதங்களாக மாறியிருக்கிறது. அமைதியின் உருவங்களாய் அலைந்து கொண்டிருந்தவர்கள் கூட ஆயுதங்கள் தரித்திருக்கும் போது அச்சமூட்டக்கூடிய உடல்மொழியை வெளிப்படுத்தியதைப் பார்க்க விநோதமாக இருந்தது எனக்கு. கலவரத்திலும் வேடிக்கை பார்க்கும் வயது, மெல்ல வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தம் பறவைகளை மட்டுமல்ல மனிதர்களையும் துரத்தத்தான் செய்தது. சாலையோரம் இருக்கும் வீடுகளின் சுவர்களில் பட்டுத்தெரித்த குண்டுகளைப் பார்க்கப் பயமாகத்தான் இருந்தது. நல்லவேளையாக அந்நேரம் எங்கள் வீட்டிற்குள் புகுந்துவிட்டேன். அப்போதுதான் கல்குவாரியிலிருந்து திரும்பியிருந்தார் என் தந்தை. அம்மா, அக்காள் என எல்லோர் முகங்களிலும் ஒரேவிதமான பதட்டம்தான் நிலைத்திருந்தது.

பரமண்டலங்களிலிருக்கிற பிதாவை நோக்கிய வேண்டுதல்களால் எங்கள் சின்னஞ்சிறிய வீடு முழுமையாக நிறைந்திருந்தது. சன்னலை மெல்லத் திறந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யுத்தத்தில் முழுமையான அனுபவம் இருப்பவர்களைப் போல, கையில் ஆயுதங்களோடு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் ஓடிக்கொண்டிருந்தன ஏராளமான கால்கள். துப்பாக்கிச் சூட்டிலும் சிலர் இறந்திருப்பதாகத் தாமதமாக வீட்டிற்கு வந்த என்னுடைய மூத்த சகோதரனும், அவருடைய நண்பரும் சொன்னார்கள். இத்தனை துயரங்கள் எங்கிருந்து பிறந்து வருகின்றன என்று யோசித்தபடி உட்கார்ந்திருந்தேன். அதைப் புரிந்துகொள்வதற்குள் முப்பது வருடங்கள் கடந்துவிட்டன.

அரசியல் தேவைகளுக்காகவோ, வேறுபல ஆதாயங்களுக்காகவோ கலவரங்கள் காற்றில் அனுப்பி வைக்கப்பட்டன என்பதை இப்போது முழுமையாக உணர்ந்து கொள்கிறேன். அன்று தென்மாவட்டங்களைச் சூழ்ந்திருந்த கலவரத்தின் கருமேகங்கள்தான் இன்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் உருவாகக் காரணமாக இருந்தது என்ற கசப்பான உண்மையை எல்லோரும் சொல்லிவிட முடியாது. என்னைப்போல பார்த்தவனும், என்னைப்போல அனுபவித்தவனும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.  இன்று திரும்பிப் பார்த்தால் அந்த மானுட அசிங்கம் மீண்டும் நடக்காமல் இருக்கிறது என்பது மிகுந்த ஆறுதலளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதற்குரிய காரணங்களும் கூட எளிமையானதுதான். பெரும்பாலானவர்கள் படித்துவிட்டு வெளியே வந்துவிட்டோம். இப்படியாக எல்லா நிலங்களிலும் நிம்மதி பிறக்க வேண்டுமென்றுதான் எப்போதும் விரும்புகிறேன்.

ஆனாலும் நான் சொல்லவந்தது முழுமையாக இதுவல்ல. அன்று நான் பார்த்த அதிகாரத்தின் காட்சிகளைத்தான். மறக்கமுடியாத அந்த இரவின் கதையை இப்போது உங்களிடம் சொல்லும்போதுகூட எங்கிருந்தோ எழுந்துவரும் பதட்டம் என்னை முழுவதுமாகப் பற்றிக்கொள்கிறது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மெல்ல அடங்கியது மோதிக்கொண்ட கால்கள். சண்டைக்குச் சென்றவர்கள், செல்லாதவர்கள் என பெரும்பாலான ஆண்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு வெளியேறி இருந்தனர். மயான அமைதியென்று சொல்வார்களே, அந்த அமைதியை அந்த இரவில் உணர்ந்து கொண்டிருந்தேன். பகல் முழுவதும் மலையோடு போராடிவிட்டு வந்த என்னுடைய தந்தை உழைத்த களைப்பில் உறங்கிப் போயிருந்தார். அந்த இருளிலும் உறங்காமல் எதைத் தேடிக் கொண்டிருந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை எனக்கு. ஆழ்ந்த அந்த நிசப்தத்தை மெல்லக் கலைத்தன ஒன்றுபட்டுக் குரைத்த நாய்களின் ஊளைச்சத்தம். அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து அதிகமாகக் கேட்டது அதிகாரத்தின் கால்கள் நெருங்கிவரும் சத்தம். ஒவ்வொரு வீட்டின் கதவுகளும் கண்டிப்பாகத் தட்டப்படவில்லை உடைக்கப்பட்ட சத்தத்தை நன்றாகக் கேட்டேன் நான். எங்கள் வீட்டின் பழைய கதவும்கூட எளிமையாகத் திறக்கப்பட்டது. அதிகாரத்தின் கால்களுக்கு அவ்வளவாக வேலை வைக்கவில்லை.

விசாரணையெல்லாம் கிடையாது, வெறிகொண்ட வேட்டை விலங்கைப்போல உழைத்துக் களைத்து உறங்கிக் கொண்டிருந்த அந்த எளிய மனிதனை, பத்துக் காவலர்கள் சேர்ந்து தூக்கிச் சென்றார்கள். என் தாயின், என் சகோதரியின் எந்த வேண்டுதல்களுக்கும், அவர் சண்டைக்கே போகலைங்க என்ற எந்தவொரு மன்றாடல்களுக்கும் செவிசாய்க்காத அந்தச் செவிட்டு அதிகாரத்தை நானும் தொடர்ந்து சென்றேன். போகும்போது கதறியழுது கொண்டிருந்த என் சகோதரியை ஆற்றாமை ஒரு கண்களிலும், வேதனை இன்னொரு கண்களிலுமாகப் பார்த்துக் கொண்டே சென்றார் என் தந்தை. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிக்குள் ஏற்றும்போது, அவர் கால்களைப் பற்றிப்பிடிக்கப்போன நானும், என் சகோதரனும் அதிகாரத்தின் வெறியேறிய கரங்களால் அருகிலிருந்த குப்பை மேட்டில் தள்ளப்பட்டோம். எங்களின் எதிர்வீட்டிலிருந்த பெரியப்பாவை அரைநிர்வாணமாய்த் தூக்கிவந்த அதிகாரத்தின் அவசரத்தை இப்போதும்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை என்னால். என்னுடைய தாயும், சகோதரியும் எவ்வளவோ பேசிப்பார்த்தார்கள் அதிகாரத்தின் காதுகளிடம்.  எல்லோரையும் விட எங்களின் கோரிக்கைகளுக்குக் காரணம் இருந்தது. ஆம் அந்த மாதத்தில் என் சகோதரிக்குத் திருமணம் முடிவாகியிருந்து. ஆனால் எதற்கும் செவிசாய்க்காத அதிகாரம் எங்கள் தெருவின் அத்தனை ஆண்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது வேகமாக. அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாத பெண்கள் அதிகாரத்தைச் சபித்துச் சாலையோரத்தில் இருக்கும் மண்ணை அள்ளியெறிந்தார்கள். அந்தச் சாபத்தின் வார்த்தைகள் எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை. அந்த இடமே புழுதிமயமாகக் காட்சியளித்ததில் எதையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. கொஞ்சநேரத்திற்கு முன்னால் தூங்கிக்கொண்டிருந்த தந்தை இல்லாத வீட்டிற்கு அழுத கண்களோடு திரும்பினோம். வசவுகளால், இன்னும் தெரியாத புதிய கதைகளால், என்ன செய்வது என்ற திட்டங்களால் எங்கள் தெருவே சத்தமாக இருந்தது. என் சகோதரியைப் பார்க்கத்தான் சங்கடமாக இருந்தது. என்னசெய்ய முடியும், எளியவர்களிடம் எப்போதும் அதிகாரம் வெட்கமில்லாமல் தானே நடந்துகொள்கிறது.

கலவரத்தின் நீட்சியாகப் பலநாட்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. சில மாதங்கள் கழித்து ஜாமீன் கிடைத்தது எல்லோருக்கும். விடுதலையான கையோடு குற்றாலம் சென்றுவிட்டு அதிகாரத்தின் அழுக்குகளை முற்றிலுமாகக் கழுவிவிட்டு ஊருக்கு வந்தார்கள். பாழாய்ப்போன அந்த இரவில், எனக்குப் பக்கத்தில் படுத்திருந்த என் தந்தைமீது அதிகாரத்தால் சுமத்தப்பட்ட குற்றங்களை எல்லோர் முன்னாலும் வாசித்தேன். குற்றம் ஒன்று, காவல் ஆய்வாளரின் மண்டையை உடைத்தார். குற்றம் இரண்டு, குற்றம் மூன்று என்று வரிசையாகச் சொல்லப்பட்டிருந்த வடிகட்டிய பொய்களைப் படித்து முடித்ததும், அந்தத் துயரத்திலும் கூட அடக்கமுடியாத சிரிப்புதான் வந்தது. ஒரு பதின்மூன்று வயது சிறுவனின் முன்னால் அதிகாரம் அம்மணமாய் நின்ற அந்தக் காட்சியை இப்போதல்ல எப்போதுமே மறந்துவிட முடியாதுதான்.

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 25/05/2023 - 2:29 PM

காக்கிச் சட்டைகள் என்றுமே ஆளும் வர்க்கத்துக்கும் பெருமுதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமே பாதுகாப்பாக இருக்கின்றன. இதுவே கசப்பான உண்மை.

ஆனால் அனுபவ வாயிலாகச் சொல்வதில் உயிர்ப்பும் உண்மையும் இரண்டறக் கலந்திருக்கிறது.

அதுவே கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவுகள்.

இன்னமும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது எனச் சொல்லிவிட முடியாது.

மாற்றங்கள் வரும் வரை இத்தகைய அனுபவப் பதிவுகள் தேவையாகவே உள்ளன.

Reply
மைத்திரிஅன்பு 25/05/2023 - 7:55 PM

”எளியவர்களிடம் எப்போதும் அதிகாரம் வெட்கமில்லாமல் தானே நடந்துகொள்கிறது.” அழுத்தமான வரலாற்று உண்மைக்கான வரிகள் தோழர். உண்மையான உணர்வும் அதன் வலியும் எழுத்துக்களாய்.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நிஜநினைவுப் பதிவாக வெளிப்பட்டதில், பல அதிகாரத்தின் அத்துமீறல்களின் கோர முகங்கள் தெரிகின்றன. காவல்துறை இன்னமும் எந்த ஒரு சுதந்திரத்தையும் இந்திய மண்ணில் பெற்றுவிடவில்லை. வெள்ளைக்காரனின் அதே அதிகாரமும் படிநிலை ஏசல்களும், உழைப்பு மற்றும் அவமதிப்புச் சுரண்டல்களும் காவல் துறையில் இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஒரு வித மனநோயாளிகள் என்றே நான் பலநேரம் உணர்ந்திருக்கிறேன். நம்முடன் படித்த பழகிய சிலரும் – சில உண்மைகளை வலிகளை உளவியல் வெளிப்பாட்டுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களை இயக்கும் அரசியலும் அதிகாரமும் மறைந்துகொண்டு, எறி கற்களென காவல்துறையினரை முன் நிறுத்தி காலம் காலமாக பல அநீதிகளை நிகழ்த்தியிருக்கும் வரலாறு நீண்டுகொண்டுதான் இருக்கிறது. மனித உணர்வு மேலோங்கிய சில அத்துறையை விட்டு வெளியேறிவிடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் மனநிலையிலிருந்து மனிதத்தை வெளியேற்றிவிட்டு – வாழப்பழகி விடுகின்றனர். எப்படியும் அதிகாரத்தின் எடுபொருளாக இருக்கும் அவர்களின் துறையும், செயலும் மாற்றம் பெற வேண்டியதன் அவசியத்தில்தான் சாமானிய உழைக்கும் மக்களின் அச்சமற்ற – பொய்யான பழிச்சொல்லுக்கு ஆளாக நேராத வாழ்க்கை இருக்கிறது. ‘அடித்தட்டு மக்கள் வரலாறு’ ’தலித்தியம்’ சார்ந்த புனைகதைகள், நாவல்கள் பலவும் அதிகாரத்தின் கோரத்தாண்டவத்தை இன்று பலருக்கும் உணர்வுப்பூர்வமாக கொண்டுசென்ற போதிலும் அதற்கான மாற்றத்தைப் பற்றி துளியும் அரசும் அதிகாரத்துவமும் சிந்திக்கவில்லை. அதைத்தான் “எளியவர்களிடம் எப்போதும் அதிகாரம் வெட்கமில்லாமல் தானே நடந்துகொள்கிறது” என்னும் வரிகள் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்துவதை உணர்கிறேன். உணர்வுடன் இணைகிறேன்.

Reply

Leave a Comment