நானும் ஒரு காத்திருக்கும் சாவியே

புதிய வாசகனிடமிருந்து வந்த அன்பின் வார்த்தைகள்!

ண்பர்களே ஒரு நிமிடம் நான் சொல்வதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது!
குழந்தை பிறக்கிறது. இரட்டைக் குழந்தைகள் இரட்டிப்பு மகிழ்ச்சி….
நீங்கள்,
உங்கள் மனைவி, இரட்டை குழந்தைகள்….

அந்த குழந்தைகளின் சிறு கண்கள்
சிறு விரல்கள்
சிறு கால்களைப்
பார்த்து ரசிப்பீர்கள் அல்லவா! ரசித்து தான் ஆக வேண்டும்….

தந்தையும் தாயும் எத்தனை எத்தனை ஆசைகளோடும், கனவுகளோடும் அந்தக் குழந்தைகளின் வளர்ப்பைப் பற்றி யோசித்திருப்பார்கள்……

அந்தக் குழந்தைகள் முதல் முறையாக கண் திறந்து பார்க்கும் போது…..

பௌர்ணமியில்
முழு நிலவு கடல் நீரில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும்
அழகு கூட தோற்றுவிடும்……

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்குவது முதல் கனவாக இருக்கும் தந்தைக்கும்…

நீங்கள் சென்று ஆசையுடன்
பிறப்புச் சான்றிதழ் வாங்கிப் பார்க்கும்போது உங்கள் மனதிற்குள் புன்னகைத்திருப்பீர்கள்.

வாங்கிய பின்பு, வீடு திரும்பும் போது உங்கள் வீடும் இல்லை மனைவியும் இல்லை
உங்கள் இரட்டை குழந்தையும் இல்லை. போரின் காரணமாக இருந்த இடம் தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள் நீங்கள் ?..

உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்ன செய்வீர்கள் என்ன செய்ய முடியும்….

ஆனால் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்…

ஆம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்…

நம்பித்தான் ஆகவேண்டும்

ஆம்
நம்பித்தான் ஆக வேண்டும்
இது உண்மைதான்.

இந்த புத்தகத்தில் வரும் “பிறப்புச் சான்றிதழ்” என்னும் கவிதையைப் படித்துவிட்டு என்னால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நம்ப முடியவில்லை ஆனால் இந்தத் துயரம் இஸ்ரேல் காஸா போரின் போது ஒரு குடும்பத்துக்கு உண்மையில் நடந்தது….

இதுபோல காஸாவில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் துயரத்தின் உச்சகட்டமான சம்பவங்கள்,
நீங்கள் நம்ப முடியாத, நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத துயர சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது …
இதை உணர்வுப் பூர்வமாக உணர்த்தியது “காத்திருக்கும் சாவிகள் ”
என்னும் கவிதை புத்தகம்…

இந்த புத்தகத்தில் வரும் “காஸாவின் குழந்தைகள் கேள்விகள் கேட்கிறார்கள்” என்னும் கவிதை அத்தியாயம் , அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் என்னிடம் இல்லை.

இந்தக் கேள்விகளை நம்மிடம் கேட்கிறார்கள், பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன் நான்

நீங்களும் வாசித்து எனக்குப் பதில் கூறுங்கள்….

“யுத்தத்திற்கு எதிரான கோமாளிகள்…”

ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன
துப்பாக்கி குண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன இருந்தாலும்

காசாவில் தந்தையை இழந்து
தாயை இழந்து துயரத்தில் இருக்கும் குழந்தைகளைச் சிரிக்க வைப்பதற்காக ஒரு கோமாளி வண்டி சுற்றிக் கொண்டே இருந்தது

போர்க்களத்தில் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அகதிகள் முகாம்களுக்குச் சென்று குழந்தைகளைச் சிரிக்க வைக்கிறது அந்தக் கோமாளி வண்டி.

அந்தக் குழந்தைகளின் வாயில் இருந்து வந்த சிரிப்பால் அந்த பிரிவினைச் சுவர்கள் தகர்த்தெறியப்பட்டன ….

அந்த சிரிப்பால் ஏவுகணைகள் சிதறி விட்டன …

அந்த சிரிப்பில் துப்பாக்கியின் தோட்டாக்கள் கூட பட்டாம்பூச்சி போல் மாறிவிடக் கூடிய வாய்ப்புள்ளது…..

இதுபோல காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தை வாசித்துப் பார்த்து
மொத்தம் 37 கவிதைகள் உள்ளன
37 விதமான வலிகளை உணர்ந்தேன்.

போரினால் ஏற்பட்ட அவல நிலையை துயரத்தை வலியை நீங்களும் உணர்வீர்கள்.

பிணந்தின்னி கழுகுகளால் நடத்தப்பட்ட போரில் மக்கள் எதற்காகச் சாகிறோம் என்று தெரியாமலே சாகிறார்கள்…

இந்த நவீன உலகத்தில் அவசரமான உலகத்தில் எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாமலே ஓடிக் கொண்டிருக்கும் மக்களே நீங்கள்..?

போர் என்னும் உரையாடலில் இஸ்ரேலுக்கும் – காஸாவிற்கும் போர் என்று உரையாடி விட்டுச் சென்று விடுவீர்கள்.

ஆனால் இந்தப் புத்தகத்தை வாசித்த பின்னர் அது தவறு என்று உங்களுக்குப் புரியும்

போரில் கேட்கும் மரண ஓலங்கள் உங்களுக்குக் கேட்கும்..

ஒரு நிமிடம் அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து எண்ணிப் பாருங்கள்
அவர்களும் நம்மைப் போலத்தான்.

அவர்களிடத்தில் இருந்து எண்ணும் போது நீங்களும் காஸாவின் விடுதலைக்காகக் காத்திருக்கும் சாவிகளாக.. மாறிவிடுவீர்கள்

நானும் ஒரு காத்திருக்கும் சாவிதான்……

— ஹரி கிருஷ்ணன்
தஞ்சாவூர்

Related Articles

Leave a Comment