இந்த உலகத்தின் இரக்கமற்ற தன்மையை ஆழமாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் ஒரு அகதியின் முகத்தைக் கொஞ்சநேரம் உற்றுப்பாருங்கள். இந்த உலகத்தின் இரத்த வரலாற்றை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், ஒரு அகதியின் கதையைக் கணநேரம் காதுகொடுத்துக் கேளுங்கள். யுத்தங்களின் கொடுமையையும், யுத்த வெறியர்களின் மனிதத் தன்மையற்ற செயல்களையும் நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால் தாய்மண்ணின் ஏக்கத்தோடு இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அகதிகளின் இதயத்தை அருகில்சென்று பாருங்கள். எங்காவது சென்று எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்ற அகதிகளின் அலைக்கழிப்பை சரிசெய்யாத வரையிலும் இந்த மனிதகுலம் நாகரீகத்தை ஒருபோதும் அடைந்துவிட்டதாக ஒப்புக்கொள்ள மாட்டேன் நான்.
அப்படிப்பட்ட அகதிகளின் அலைக்கழிப்பை, மானுட வலியை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறது சென்ற வருடத்தில் வெளியான ஓர் திரைப்படம். போலந்து நாட்டைச் சேர்ந்த எழுபத்தைந்து வயதாகும் இயக்குநர் அக்னிஸ்கா ஹாலந் இயக்கியிருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளில் அரங்கேற்றப்பட்ட யுத்தம் தொடங்கி, இப்போது நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய உக்ரைன் யுத்தமாகட்டும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தமாகட்டும் அத்தனையிலும் அகதிகளாக்கப்பட்ட மனிதர்களின் வலிகளும் வேதனைகளும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஆனாலும் மானுட அன்பால் நிறைந்திருக்கும் தன்னுடைய இதயத்தால் அந்த வலியையும் வேதனையையும் கூடுமான வரையிலும் தன்னுடைய திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் அக்னிஸ்கா ஹாலந்.
வெனிஸ் திரைப்பட விழாவிலும், ரோட்டெர்டாம் திரைப்பட விழாவிலும் இன்னும் உலகத்தின் முக்கியமான திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல பிரிவுகளில் விருதுகளையும் வென்றிருக்கிறது. மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது, மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் சிறந்த போலந்து திரைப்படம் என்று உலகத்தின் திரை விமர்சகர்களால் சொல்லப்பட்டாலும் இயக்குநரின் சொந்த நாடான போலந்தின் ஆட்சியாளர்கள் இது போலந்திற்கு எதிரான படம் என்று வெறுப்பைக் கொட்டினார்கள். ஏனென்றால் இந்தத் திரைப்படம் உண்மையை உண்மையாகவே வெளிப்படுத்திவிட்டது. ஒரு நேர்காணலில் மானுடத் துயர்மிகுந்த இந்தக் கதையை துயருறாமல் எப்படி இயக்கினீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, அழுவதல்ல, அந்தக் கதையைச் சொல்வதே என்னுடைய கடமையென்று கருதினேன் என்று பதில் சொல்கிறார் இயக்குநர்.
சிரியாவின் வானத்திலிருந்து விழுந்த குண்டுகளுக்குப் பலியாகாமல் ஒரு குடும்பம் அகதியாக எப்படியாவது ஸ்வீடனுக்குச் சென்றுவிடலாம் என்று பெலாரஸின் வழியே ஐரோப்பிய எல்லையான போலந்துக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்களோடு ஆப்கானிலிருந்து வந்த ஆசிரியையும் இணைந்து கொள்கிறாள். வேறு ஒன்றுமில்லை அவர்களுக்குத் தேவை நிம்மதியான ஒரு வாழ்க்கை, அவ்வளவுதான். சிரியாவிலிருந்து அகதியாக வந்திருக்கும் குடும்பத்தின் கைகளில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையின் அழுகையோடுதான் படம் தொடங்குகிறது. பெலாரஸிலிருந்து போலந்தை நோக்கி அடர்ந்த காட்டின் வழியாக அவர்கள் பயணிக்கும் போதும் அந்தக் குழந்தை அழுகிறது. பெலாரஸிலிருந்து போலந்திற்குள் விரட்டப்படும்போதும், போலந்திற்குள் இருந்து மீண்டும் பெலாரஸிற்குள் விரட்டப்படும் போதும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகுரலே நம்மை சொல்லமுடியாத துயரத்திற்குள் ஆழ்த்திவிடுகிறது.
அந்தக் கம்பி வேலிகளுக்குள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அகதிகள் அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கும் போது தாங்கமுடியாத வேதனை இதயத்தைத் துளைத்துச் செல்கிறது. போதாக்குறைக்கு “அவர்கள் மனிதர்களல்ல, ஆயுதங்கள், நோய்பரப்பும் கிருமிகள்” என்று வெறுப்பைக் கொட்டுகிறான் போலந்தின் இராணுவ அதிகாரி ஒருவன். அவனுடைய கட்டளையை இதயத்தில் எந்தவித ஈரமுமில்லாமல் எல்லைகளில் நிறைவேற்றுகிறார்கள் இராணுவ வீரர்கள். ஆனால் அங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதன் சாட்சியாக, சில செயற்பாட்டாளர்கள் உயிரைத் துச்சமாக எண்ணி, இராணுவக் கட்டுப்பாடுகளையும் மீறி அந்தக் காடுகளுக்குள் அகதிகளைத் தேடித்தேடி உதவிசெய்கிறார்கள். அவர்களின் பசியைப் போக்கி, காயங்களுக்கு மருந்திடுகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். எந்த நாடாகட்டும் ஆட்சியாளர்கள்தான் வெறுப்பைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள், மக்கள் அன்பை மட்டுமே கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் வழியாக இன்றைய இயக்குனர்களும் கலை இலக்கியவாதிகளும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் எதுவென்றால், பற்றி எரிந்து கொண்டிருக்கும் சமகாலப் பிரச்சனைகளுக்கு எப்படி முகம் கொடுப்பது. சுற்றிலும் யுத்தங்கள், சுற்றிலும் படுகொலைகள், ஏகாதிபத்தியத்தின் கொடுங்கரங்களால் கூறுபோடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தை எப்படிப் புரிந்துகொள்வது. அப்படி பார்த்த சமகாலத்தை, அப்படிப் புரிந்துகொண்ட சமகாலத்தை எப்படி கலையில் கடத்துவது. இதுதான் இதுமட்டும்தான் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலையைப் பிரசவிப்பதற்கு மானுட அன்பூறும் இதயம் கொண்டவராக இருப்பதுதான் முதல்தகுதி. கலைஞனுக்கும் வியாபாரிக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை துல்லியமாகப் புரிந்துகொள்வது இரண்டாவது தகுதி. அக்னிஸ்கா ஹாலந் ஒரு படைப்பாளியாக தன் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் மானுட வலியை எப்படித் திரைப்படமாக்கினார் என்பதற்குப் பின்னால் இருக்கும் கதையை அவரே சொல்வதைக் கேளுங்கள்.
காலம் : 2021 குளிர்காலம்
இடம் : போலந்தையும் பெலாரஷையும் பிரிக்கும் பசுமை எல்லை
“யுத்தத்தின் பெயரால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அகதிகளாகப் புறப்பட்டு வந்த மக்கள் பலர் போலந்து எல்லையில் அனுமதி வேண்டி கூட்டம் கூட்டமாக காத்திருந்ததைப் பார்க்க நேர்ந்தது. உண்ண உணவில்லாமல், குடிக்கத் தண்ணீருமில்லாமல், மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாடிய முகத்தோடு நின்று கொண்டிருக்கும் அந்த மனிதர்களைப் பார்ப்பதற்கே சங்கடமாக இருந்தது. அந்த அகதிகள் ஒருபக்கம் போலந்து இராணுவத்தாலும், இன்னொருபக்கம் பெலாரஸ் இராணுவத்தாலும் சூழப்பட்டிருந்தார்கள். இறுகக் கட்டப்பட்டிருக்கும் கம்பி வேலிக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக இராணுவ வீரர்களால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்தன. பெண்களும் வயோதிகர்களும் பலவீனமாகிக் கொண்டிருந்தார்கள்.
பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒருசில பத்திரிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்த என் நண்பர்களின் மூலமாக அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாங்கிப்பார்த்தேன். பாதி உயிர்பிடித்து வாழ்க்கைக்காகக் காத்திருந்தார்கள் அந்த அகதிகள். உண்மையில் ஒரு பேரழிவு அப்போதுதான் தொடங்கியிருந்தது. ஆம் குளிர்காலம் வந்துவிட்டது. உறைபனியில் நடுங்கியபடி அந்தக் காட்டிற்குள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள் அகதிகளாக்கப்பட்டவர்கள். யாரும் உதவவில்லை என்றால் அவர்கள் சாகத்தான் போகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்தது எனக்கு. அவர்களுக்குத் தேவையான எதையும் என்னால் செய்ய முடியாமல் இருப்பதே மிகுந்த வேதனையைத் தருவதாக இருந்தது. அப்போதுதான் முடிவுசெய்தேன். எப்படித் திரைப்படம் எடுக்கவேண்டுமென்று எனக்குத் தெரியும். இந்த ஆட்சியாளர்கள் எதை மறைக்க முயற்சிக்கிறார்களோ, அதை திரைப்படத்தில் காட்ட முடிவு செய்தேன்” என்று சொல்கிறார் அக்னிஸ்கா ஹாலந்.
இப்போது சொல்லுங்கள் தோழர்களே! திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா?
இப்போது சொல்லுங்கள் தோழர்களே! திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா?
ஜோசப் ராஜா