வரலாறு படிப்பவனிடம் தொழிலாளியின் கேள்விகள்

பெர்தோல்ட் பிரெக்ட்

இருபதாம் நூற்றாண்டின் தவிர்க்கமுடியாத நாடக ஆசிரியரும், கவிஞருமான பெர்தோல்ட் பிரெக்ட் 1898 ல் ஜெர்மனியில் பிறந்தார். அவரது காலகட்டத்தில் நடந்த இரண்டு உலகப்போர்களுமே அவருடைய வாழ்விலும், எழுத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கலைஞனாக எப்போதுமே மக்களுக்காகக் குரலெழுப்பியவர் பிரெக்ட். அவரது காலகட்டத்தில் பூக்கத் தொடங்கிய புரட்சியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், அந்தக் கருத்துக்களைத் தன்னுடைய எழுத்திலும் பிரதிபலித்தவர்.  அதனால்தான் பெருவாரியான மக்களால் விரும்பப்பட்டும் கூட, மனிதகுல விரோதிகளான நாஜிக்களால் வெறுக்கப்பட்டார். தொடர்ந்து ஜெர்மனி தேசமானது நாஜிக்களின் ஆளுகையின் கீழ் வந்ததும், டென்மார்க்கிற்கு இடம்பெயர்ந்தார். ஐரோப்பாவில் நாஜிக்கருத்துகள் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிரெக்ட் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். சில ஹாலிவுட் திரைப்படங்களில் வேலைசெய்தார்.  முதல் உலகப்போரின் முடிவையொட்டி அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியது. பிரெக்ட்டும் நேரடியாகவே விசாரிக்கப்பட்டார். அதற்குமேல் அந்த நிலமும் அவருக்கு வறண்டுபோக, மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

புரட்சியின் ஊற்றுக்கண்ணான சோவியத் யூனியன், தலைவர் ஜோசப் ஸ்டாலினின் தலைமையில், கொடுங்கோலன் ஹிட்லரின் ஜெர்மனியை மட்டும் வெற்றிகொள்ளவில்லை. உலகெங்கிலும் ஜனநாயகத்திற்கு எதிராக இருந்த ஒவ்வொரு எதிரியையும் வெற்றிகொண்டார்கள் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து சோசலிஸ கிழக்கு ஜெர்மனி, புலம்பெயர்ந்து நாடுநாடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரெக்டை இருகரம் நீட்டி அழைத்துக்கொண்டது. அன்றிலிருந்து இறக்கும் வரையிலும் சோசலிசக் காற்றைச் சுவாசித்துக் கொண்டும், சோசலிசம் குறித்துச் சிந்தித்துக் கொண்டும் அங்கேயே வாழ்ந்தார். புதிய உலகின் உதாரணமான சோவியத் யூனியனை இதயத்தின் ஆழத்திலிருந்து நேசித்தவர் பிரெக்ட். அந்தப் புதிய உலகை நீண்டகாலம் கட்டிக்காப்பாற்றிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் பிரெக்ட். எதிரி யாரென்று தெளிவாய்த் தெரிந்துகொண்டவர், கலைஞன் யாருக்காகப் பேசவேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவாய் இருந்துவந்தவர். அதனால்தான் இன்றும் நினைக்கப்படுகிறார், இனியும் நினைக்கப்படுவார் பெர்தோல் பிரெக்ட்.

உலகத் தொழிலாளர்கள் பற்றி அதிகமாகப் பேசப்படும் இந்த மே மாதத்தில், வரலாற்றின் பெருமிதங்களாகச் சொல்லப்படும் ஒவ்வொன்றின் மீதும் தொழிலாளியின் குரலில் கேள்விக்கணைகளை வீசியெறியும் பெர்தோல்ட் பிரெக்ட்டின், என்றும் எனக்குப் பிடித்த இந்தக் கவிதையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய வரலாற்றுப் பெருமிதங்களை நோக்கி பிரெக்டைப்போல நீங்களும்கூட இப்படிக் கேட்டுப்பார்க்கலாம். . .

வரலாறு படிப்பவனிடம் தொழிலாளியின் கேள்விகள்

தேப்ஸின்

ஏழு வாயில்களைக் கட்டியது யார்?

மன்னர்களின் பெயர்களைப்

புத்தகங்களில் வாசிப்பீர்கள்,

மன்னர்களா

மலைகளிலிருந்து கற்களைச் சுமந்து வந்தார்கள்?

 

பாபிலோன்

பலமுறை இடித்து நொறுக்கப்பட்டது

யார் அதை

மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பினார்கள்?

 

பொன்னைப் போல் மின்னும்

லிமாவின் வீடுகளில்

கட்டியவர்கள் வாழ்கிறார்களா?

 

சீனப்பெருஞ்சுவர்

கட்டிமுடிக்கப்பட்ட மாலையிலேயே

கட்டியவர்கள் சென்றுவிட்டார்களா?

 

மாபெரும் ரோமாபுரியில்

நிறைந்துள்ள வெற்றிவளைவுகளை

கட்டியவர்கள் யார்?

 

சீசரின் வெற்றி

யாரால் நிகழ்ந்தது?

 

ண்ணற்ற பாடல்களால் புகழப்பட்ட

பைசாண்டிய நகரம்

மாளிகைவாசிகள் குடியிருக்க மட்டுமா?

 

ட்லாண்டிஸ் கட்டுக்கதையில் கூட

ஒரே இரவில் அட்லாண்டிஸ் கடலில் மூழ்கியது

மூழ்கியவர்கள் இப்போதும்

தங்கள் அடிமைகளுக்காக அழுகிறார்களா?

 

ளைஞனான அலெக்சாண்டர்

இந்தியாவரை சென்றது தனியாகவா?

 

கால்சைத் தோற்கடித்த சீசரோடு

ஒரு சமையற்காரன் கூட இல்லையா?

 

ஸ்பெயின் அரசன்

தன் படை வீழ்ந்ததும் அழுதானாம்

அழுதது அவன் மட்டும்தானா?

 

ரண்டாம் பிரடெரிக்

ஏழாண்டு போரை வென்றானாம்

அந்த வெற்றியில் வேறு யாருமே இல்லையா?

 

வ்வொரு பக்கமும் வெற்றி

வெற்றியாளர்களுக்காக

விருந்து சமைத்தது யார்?

 

வ்வொரு பத்தாண்டும்

ஒரு சிறந்த மனிதன்

அதற்காக விலைகொடுத்தது யார்?

 

ப்படியாக

எண்ணற்ற குற்றச்சாட்டுகள்

 

ப்படியாக

எண்ணற்ற கேள்விகள்

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 03/05/2023 - 2:05 PM

பொதுவுடமைக் கவிஞர் பெர்தோல்ட் ப்ரெக்ட் ஐ தமக்கேயுரிய முறையில் அறிமுகம் செய்து வைக்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா. அறிமுகத்தோடு விடவில்லை அவர். பெர்தோல்ட் ப்ரெக்ட்டின் கவிதையையும் நமக்கு விருந்தாக்கியுள்ளது சிறப்பு.

பொருத்தமான காலத்தில் பொருத்தமான கவிஞரைப் பற்றிய பொருத்தமான அறிமுகத்தைப் பொருத்தமான கவிஞரிடமிருந்து நாம் பெறுவது நமக்கு மகிழ்ச்சி தானே!

பிறர்க்கும் அனுப்புங்கள். நீங்களும் வாசியுங்கள்.

Reply

Leave a Comment