இப்போதும் கூட கவிதையைக் கண்டுகொண்டதைத் தான் இந்த வாழ்வின் பெருமதிப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கவிதையை உணரத் தொடங்கி, கவிதையை எழுத ஆரம்பித்து, கவிதையாகப் பார்த்துப் பழகிக் கொண்டிருக்கும் இந்த இருபது வருடங்கள் அலுக்கவேயில்லை எனக்கு. சோவியத் இலக்கியங்களின் அறிமுகம்தான் முதன்முதலில் இதயத்தின் ஆழத்தில் நெருப்பைப் பற்றவைத்தது. அந்த இலக்கிய அனுபவத்தை என்னுடைய வாழ்வனுபத்தோடு பொருத்திக் கொள்வது எளிதாகத்தான் இருந்தது. சோவியத் இலக்கியங்களின் வழியாகத்தான் உலக இலக்கியங்களைத் தேடி கண்டடைந்தேன். ஜான் கீட்ஸ், வால்ட் விட்மன், பாப்லோ நெருடா, கலீல் ஜிப்ரான், நசீம் இக்மத் என்று எத்தனையோ கவிஞர்கள் எனக்கு பாதைசமைத்துக் கொடுத்தார்கள். உண்மையைச் சொன்னால் மிகத் தாமதமாகத்தான் பாலஸ்தீனத்தின் மக்கள் கவிஞர், அரபு இலக்கியத்தின் அசைக்கமுடியாத ஆளுமையான மஹ்முத் தர்விஷை வாசிக்கத் தொடங்கினேன். எம்.ஏ. நுஹ்மான் அவர்களின் மொழிபெயர்ப்பில் மூன்றாவது மனிதன் பதிப்பக வெளியீடாக வந்திருந்த பாலஸ்தீனக் கவிதைகள் என்ற புத்தகத்தை கையிலேந்திய அந்த இரவை அவ்வளவு எளிதாக என்னால் மறந்துவிட முடியாது.
அந்த இரவு ஒளிரும் நிலவோடும், ஒருசில நட்சத்திரங்களோடும், மஹ்முத் தர்வீஷின் கவிதைகளோடும் கடந்து கொண்டிருந்தது. இரவின் குளுமையை தர்வீஷின் கவிதைகள், கதகதப்பென்று கூடச் சொல்ல முடியாது அக்கினிக் குழம்புகளாய் கொதிக்கச் செய்து கொண்டிருந்தது. கவிதை என்ன செய்யும் என்று உள்ளும் புறமுமாக உணர்ந்துகொண்ட தருணம் அது. அந்த இரவிலிருந்து சக கவிஞர்களாக தர்வீஷும் நானும் தோழர்களாகிவிட்டோம். புத்தகங்களில், இணையத்தில் என கிடைத்த அத்தனை வாய்ப்புகளின் வழியாகவும் தர்விஷை நெருங்கிக் கொண்டிருந்தேன். அவருடைய வார்த்தைகளில் நிறைந்திருந்த துயரம் என்னை துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தது. அவருடைய வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்த கோபம் என் நாடி நரம்புகளுக்குள் சூடேற்றிக் கொண்டிருந்தது. துயரத்திலிருந்து ஆறுதலுக்கும், வலிகளிலிருந்து விடுதலைக்கும், சிறையிலிருந்து சுதந்திரத்திற்குமாக மாறிமாறி பயணித்துக் கொண்டிருந்தேன்.
உங்களுக்குத் தெரியுமா தோழர்களே, அந்த நீண்ட இரவின் முடிவில், சூரியன் உதயமாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில், கையிலிருந்த பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பின் வழியாக, உலகத்தில் நீண்டகாலமாக வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், திறந்தவெளி சிறைச்சாலையான பாலஸ்தீன நிலத்தில் நின்று கொண்டிருந்தேன். மஹ்முத் தர்வீஷின் கவிதைகளை வாசிக்க தொடங்கினால் நிச்சயம் நீங்களும் நூற்றாண்டுகால பாலஸ்தீன இடுபாடிகளுக்குள்ளும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திற்குள்ளும் பயணிக்கத் தொடங்கிவிடுவீர்கள். மீண்டும் ஒரு பேரழிவை பாலஸ்தீனம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இது நடக்கக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் விரும்பிக் கொண்டிருந்த, இப்படிப்பட்ட பேரழிவுகளை எதிர்த்து எப்போதும் எழுதிக் கொண்டிருந்த மகத்தான கவிஞர் மஹ்முத் தர்வீஷை உங்களோடு பகிர்ந்து கொள்வது கடமையெனக் கருதுகிறேன்.
மஹ்முத் தர்விஷ் 1941 ஆம் வருடத்தில் பாலஸ்தீனத்தின் அக்றே என்ற நகருக்குப் பக்கத்திலிருக்கும் பிர்வா என்ற கிராமத்தில், சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். சில வருடங்கள் கழித்து, தர்வீஷுக்கு ஆறு வயது இருக்கும் போது இஸ்ரேலிய இராணுவத்தால், அவருடைய கிராமத்தையும் சேர்த்து சுற்றிலும் இருக்கும் 400 கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவே, 7 லட்சத்து 26000 மக்களோடு தர்வீஷின் குடும்பமும் லெபனானிற்கு இடம்பெயர்கிறது. சிலவருடங்கள் கழித்து சொந்த நிலத்திற்குத் திரும்பியவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கே யூதக்குடியேற்றம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருந்தது. வேறு வழியில்லாமல் சொந்த நிலத்தில், சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் அந்த மண்ணின் சொந்தக்காரர்கள். பால்யத்தில் தொடங்கிய இந்த இடம்பெயர்வு கிட்டத்தட்ட அவர் இறக்கும் வரையிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. பால்யத்தின் அந்த வேதனையை காலமெல்லாம் சுமந்து கொண்டிருந்தேன் என்று சொல்லும் தர்வீஷின் வார்த்தைகள் நம்மையும் அந்தத் துயரத்திற்குள் வேகவேகமாக இழுத்துச் செல்லக் கூடியவைகள்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் அகதியைப்போல வாழநேர்ந்த தர்வீஷின் அனுபங்களே அவருடைய கவிதையின் ஆதாரங்களாக இருக்கின்றன. பள்ளி மாணவனாக இருக்கும் போதே எழுதத் தொடங்குகிறார். பள்ளி விழாவொன்றில் எழுதி வாசித்த இந்தக் கவிதையைப் பற்றிய நினைவுகளை நேர்காணலொன்றில் பகிர்ந்து கொள்கிறார் இப்படியாக.
யூதச்சிறுவனிடம் அரபுச்சிறுவன் கேட்பதாக அமைக்கப்பட்ட அந்தக் கவிதை இதுதான்
நீங்கள் விரும்பியபடி வெயிலில் விளையாடலாம்
என்னால் முடியாது
நீங்கள் விரும்பிய பொம்மைகளை வைத்திருக்கலாம்
என்னால் முடியாது
உங்களுக்கென்று வீடு இருக்கிறது
எனக்கென்று எதுவும் கிடையாது
உங்களுக்கென்று கொண்டாட்டங்கள் இருக்கின்றன
எனக்கென்று எதுவும் கிடையாது!
என்று வாசித்த இந்தக் கவிதைக்காக அந்தப் பகுதியின் இரணுவ ஆளுநர் பள்ளி மாணவனான தர்வீஷை அழைத்து மிரட்டுகிறார். இனி இதுபோல் எழுதிக்கொண்டிருந்தால் உன் தந்தையைக் குவாரி வேலையிலிருந்து நீக்கிவிடுவேன் என்கிறார். பாவம் ஒரு இராணுவ அதிகாரி, அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். பால்யத்தில் எழுதிய கவிதைக்காக, கவிதையில் இருந்த உண்மைக்காக அதிகாரத்தால் மிரட்டப்பட்ட தர்விஷின் கவிதைகள், பிற்காலத்தில் பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல, அரேபியர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டக் கூடியவைகளாக இருக்கப் போகின்றன என்று. தர்விஷ் இல்லையென்றாலும் அவர் கவிதைகள் இப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.
1960 ல் தன்னுடைய 19 ஆம் வயதில் சிறகில்லா பறவைகள் என்ற முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட தர்விஷ் 2008 ல் தான் இறக்கும் வரையிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருந்தார். இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததற்காகவே கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்குள்ளாக்கப் பட்டிருக்கிறார். 1971 ல் இருந்து சோவியத் யூனியன், துனீசியா, லெபனான், எகிப்து, பிரான்ஸ் என்று தொடர்ந்து பல்வேறு தேசங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார். அரபு இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான அல் கர்மல் என்ற இலக்கியப் பத்திரிக்கையைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்தார்.
1960 ல் தர்விஷ் கைதுசெய்யப்பட்டார். காரணம் என்ன தெரியுமா? அனுமதி இல்லாமல் பாலஸ்தீனத்தின் கிராமங்களுக்குப் பயணம் செய்து கவிதை வாசித்ததற்காக. இஸ்ரேலின் இரும்புப் பெண்மணி என்று சொல்லப்பட்ட கோல்டா மேயர் அதிபராக இருந்தபோது இன அழிப்பின் உச்சத்தில் இனி பாலஸ்தீனன் என்று ஒருவரும் இல்லை என்று சொன்னதற்கு எதிர்வினையாக, தர்விஷ் எழுதிய எழுதிக்கொள் நான் ஒரு அரேபியன் என்று தொடங்கும் அடையாள அட்டை என்ற தலைப்பிலான கவிதை, ஒவ்வொரு அரேபியருக்குமான கவிதையாக, பொதுமக்களும், புரட்சிக்காரர்களும் என எல்லோரும் ஏந்திக்கொள்ளும் எதிர்ப்புக் கவிதையாக மாறியதால் நீண்டநாள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பாலஸ்தீன மக்களின் இதயங்களை வென்ற மாபெரும் தலைவர் யாசர் அராபத் தொடங்கிய பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணிசெய்திருக்கிறார். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, அரபு நாடுகளில் மட்டுமல்ல, உலகமெங்கும் தர்வீஷின் கவிதைகளை விரும்புகிறவர்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள். தர்வீஷின் கவிதை வாசிப்பைக் கேட்க ஆயிரமாயிரமாய்க் கூடுகிறார்கள். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் தர்வீஷின் கவிதை வாசிப்பைக் கேட்க அரங்கில் நிறைந்திருந்தவர்களின் எண்ணிக்கை 25000 பேர். இஸ்ரேலியர்களால் கூட இன்றுவரையிலும் அதிகம் வாசிக்கப்படுகிறது மஹ்முத் தர்வீஷின் கவிதைகள். யூதர்களின் ஹீப்ரு மொழியிலும் அவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
அப்படியென்றால், யுத்தத்தைப் பற்றிக் கேட்கிறீர்களா? நீங்களே சொல்லுங்கள். யுத்தத்திற்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பாலஸ்தீனர்களை மட்டுமல்ல, இஸ்ரேல் மக்களையும்தான் அரசாங்கம் அடக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று இஸ்ரேலிய காவல்துறைத் தலைவர் போருக்கு எதிராக யாராவது குரலுயர்த்தினால் அவர்களை பேருந்தில் ஏற்றி காஸாவில் கொண்டுபோய் இறக்கிவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார். எங்கள் பெயரைச்சொல்லி அவர்களைப் படுகொலை செய்யாதீர்கள் என்று யுத்தவெறி பிடித்த அமெரிக்காவிலும் கூட யூதர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளே யுத்தத்தை விரும்புகிறார்கள். ஒருபோதும் மக்களல்ல. முதலாளிகளே பேரழிவிற்காகக் காத்திருக்கிறார்கள். ஒருபோதும் மக்களல்ல. அப்படிப்பட்ட அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்ட மஹ்முத் தர்வீஷின் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமென்று நானும் விரும்புகிறேன். பாலஸ்தீனத்தின் மரங்களையும் மலைகளையும் செடிகளையும் பழங்களையும் என எல்லாவற்றையும் கவிதைகளில் வெளிப்படுத்திய தர்வீஷிடமிருந்துதான் பாடுபொருள்களைத் தேர்ந்தெடுப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு கவிஞனும் தன்னுள் ஆயிரமாயிரம் கவிஞர்களை உள்ளடக்கியிருக்கிறான் என்று தர்விஷ் அடிக்கடி சொல்வதைப்போல, எனக்குள்ளும் தர்விஷ் நிறைந்திருக்கிறார்.
பாலஸ்தீனம் துண்டாடப்பட்டதைக் கவிதைகளின் வழியாக உலகிற்குச் சொன்னவர் தர்விஷ். பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கவிதைகளின் வழியாக உலகிற்குச் சொன்னவர் தர்விஷ். பாலஸ்தீனர்கள் சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டதை, சொந்த நிலத்தில் கொல்லப்பட்டதை வாழ்வு முழுவதும் தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியவர். பாலஸ்தீனர்களின் சொந்த நிலத்திற்கான போராட்டத்தை கவிதைகளில் வெளிப்படுத்தியவர். காலமெல்லாம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏராளமான மக்களின் நம்பிக்கையாக இருந்தன அவருடைய கவிதைகள். எப்பாடுபட்டாவது இழந்த சொர்க்கத்தை – தாய்நிலம் – மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது அவருடைய கவிதைகள். இன்னும் ஏராளம் எழுதலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வேன். என் நேசத்திற்குரிய கவிஞரை இந்தளவேனும் உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். தேடுங்கள் தர்வீஷின் வார்த்தைகளை. கண்டடைவீர்கள் உண்மையான சுதந்திரத்தை.
இதோ பிரகடனம் என்ற தலைப்பிலுள்ள மஹ்முத் தர்வீஷின் கவிதை உங்களுக்காக
என்னைச் சுற்றிக் கட்டலாம்
வாசிப்பதற்கும் புகைப்பதற்கும்
எனக்குத் தடைவிதிக்கலாம்
பேசக்கூடாதென்று
எனக்கு வாய்ப்பூட்டு போடலாம்
ஆனபோதிலும்
கவிதை என்பது
துடிக்கும் என்னிதயத்தின் இரத்தம்
என்னுடைய ரொட்டியிலிருக்கும் உப்பு
என் கன்ணிலிருக்கும் திரவம்
என்னுடைய நகங்களாலும்
என்னுடைய இமைகளாலும்
எழுதுவேன் என்னுடைய கவிதையை
சிறைச்சாலையிலும்
குளியலறையிலும்
குதிரை லாயத்திலும்
பாடுவேன் என்னுடைய கவிதையை
சவுக்கடியின் நேரத்திலும்
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் போதிலும்
கைவிலங்குகள் அழுத்துகின்ற வேளையிலும்
பாடுவேன் என்னுடைய கவிதையை
உனக்குத் தெரியுமா
போரிடும் எனது பாடலைப்பாட
கோடிக்கணக்கான வானம்பாடிகளை
எனக்குள் நிறைத்திருக்கிறேன் நான்!
–மஹ்முத் தர்விஷ்
2 comments
பாலஸ்தீனியக் கவிஞர் மஹ்மூத் தர்விஷின் அறிமுகம்
அபாரமானது. அவரது கவிதை ஒன்றையும் இறுதியில் பதிவு செய்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா. உள்ளூர் கவிஞர்களின் கவிதைகளையே படிக்காத நிலையில் எண்ணற்றோர். இந்நிலையில் வெளிநாட்டுக் கவிதைகளை எங்கிருந்து படிக்க? என்ற ஆதங்கம் ஒரு புறம் இருப்பினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கொப்ப இடைவிடாது எழுத்துப் பணியில் இயங்கிவரும் கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையை வாசியுங்கள். சமூக பிரக்ஞை தானாக வரும். பிறகென்ன? நீங்களும் இயங்குவீர் உங்களின் விருப்பத் தளத்தில்.
வணக்கம் தோழர். மஹ்முத் தர்விஷ் அவர்களின் வாழ்வையும், வாழ்வுடன் விடுதலை குறித்த போராட்டத்துடன் கலந்த – கவிதையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நான் மஹ்முத் தர்விஷ் – அவர்களின் கவிதைகளை வாசித்ததில்லை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் வாசிக்க முயற்சிக்கிறேன். உண்மையில் நீங்கள் குறிப்பிட்டதைப் போல ‘கவிதை என்ன செய்யும்?’ என்ற கேள்விக்கு பதிலாக காலம் பலவாறான பதில்களை தந்திருக்கிறது. இலக்கியத்தில் கதைக்கும் கவிதைக்கும் இருக்கும் இடம்.. ”எதுவும் செய்யும்” இவை என்பதாக இருப்பதை உணர்ந்தே ஆகவேண்டியிருக்கிறது. கதையை காட்டிலும் கவிதையில் அதன் பங்களிப்பு சற்றே கூடுதல். அவ்வகையில் தங்களின் கவிதைகளும் தொடர்ந்து எளிய மொழியில் வசன தொணியில் அழுத்தமான கருத்தியலும் தொடர்ந்து பேச வேண்டிய போராட்ட களங்களுக்கான தூண்டுகோல்களாக அமைந்து வருவதை கவனிக்கிறேன். உங்களின் வாசிப்பும், உள்வாங்களும் அவசியமானதென்றே உணர்கிறேன். இன்றைய யந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் – பலரும் பொருளாதாரத்தை மட்டுமே அளவுக்கு அதிகம் விரும்பும் கலாச்சாரப் பேய்களாகயுள்ளனர். இதற்கிடையில் விழுமியங்களும் முன்மாதிரிகளும் அற்ற இளைஞர்கள் எதிர்காலத்தில் அடையாளமற்றவர்களாக தொலைந்து போகக் கூடும் அவலம் நீடிக்கிறது. இதனை ஒரு கருத்தியல் சார்ந்த எழுத்தும் படைப்பும் மாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு எழுத்து ஒரு எழுத்தாக மட்டுமின்றி வளர்ந்து பெருங்காட்டுத் தீயென பல தரப்பிலும் பல்வேறு போராட்டக் காரணங்களை விவரிக்கக் கூடியதாகவே இருப்பதை தொடர்ந்து உங்கள் கவிதைகளிலும் இதோ இதுபோன்ற கட்டுரைகளிலும் உணர்கிறேன். இதன்வழி வாசிப்பும் வளப்படும் என நானும் நம்பிக்கைக் கொள்கிறேன். நன்றி தோழர்