சமீப காலமாகப் பாலஸ்தீனத்தைப் பற்றிய கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ, கண்களைக் குளமாக்கும் புகைப்படமோ எதைப்பார்த்தாலும் உடனே எனக்கும் அனுப்பிவிடுவார் அண்ணன் செழியன். யுத்தத்தைப் பற்றிய முக்கியமான கவிதைகள் கண்ணில் பட்டால் உடனுக்குடன் அனுப்பி வைப்பார். அதுபோல, இன்று காலையில் மின்சார இரயிலில் வந்துகொண்டிருந்த போது அவரிடமிருந்து வந்தது இந்தக் கவிதை. ஒருமுறை வாசித்தேன். இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்ததை உணர்ந்துகொள்ள முடிந்தது. இன்னொருமுறை வாசித்தேன் கண்கள் கலங்குவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கும் அந்த உணர்வைக் கடத்த நினைக்கிறேன்.
கவிதையின் வேலை உணரச்செய்வது தான். உணர்ந்ததை உணரச்செய்வது. நான் இப்படித்தான் நம்புகிறேன். மானுட உணர்வு இருக்கும் வரையிலும் கவிதை இருக்கும். போர் என்ற மானுட அவலத்திற்கு எதிராக, மானுட நாகரீகத்திற்கு எதிராக என்றென்றும் கவிதை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும். அந்தவகையில், ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஜேம்ஸ் பால்ட்வின், அமெரிக்கா வியட்நாமின் மீது யுத்தம் தொடுத்தபோது அதற்கு எதிராக எழுதினார். குண்டுவீசப்படும் ஒவ்வொரு நகரமும் என்னுடைய நகரமே என்ற புகழ்பெற்ற கவிதை அது. அமெரிக்க இப்போது நேரடி யுத்தமில்லாமல், இரண்டு மறைமுக யுத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரமிது. குழந்தைகளின் இரத்தம் பூமியில் ஆறாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் காலமிது. பாலஸ்தீனத்திற்கும் பொருந்தும் கவிதை. வாசித்துப் பாருங்கள் தோழர்களே!
குண்டுவீசப்பட்டுக்
குதறப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு நகரமும்
என்னுடைய நகரமே!
போரில் கொல்லப்பட்ட
ஒவ்வொரு குழந்தையும்
என்னுடைய குழந்தையே!
ஈடுசெய்யமுடியாத இழப்புகளால்
துயரத்தோடு இருக்கும்
ஒவ்வொரு தாயும்
என்னுடைய தாயே!
சொல்லமுடியாத உணர்வுகளால்
அழுது கொண்டிருக்கும்
ஒவ்வொரு தகப்பனும்
என்னுடைய தகப்பனே!
கட்டிடக் குவியல்களாக
மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு வீடும்
நான் வளர்ந்த வீடுதான்!
இன்னும் கொல்லப்படாத
சகோதரனைத் தூக்கிக்கொண்டு
அகதிகளாக
எல்லை கடந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு சகோதரனும்
என்னுடைய சகோதரனே!
இன்னும்
வீடுவந்து சேராத
சகோதரிக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு சகோதரியும்
என்னுடைய சகோதரியே!
ஆம்
இந்த மக்கள் ஒவ்வொருவரும்
நம்முடையவர்கள்
நாமும் அவர்களுடையவர்கள்
நாம்
அவர்களுக்குச் சொந்தமானவர்கள்
அவர்கள்
நமக்குச் சொந்தமானவர்கள்
அப்படியென்றால்
இந்த யுத்தம் தேவையா?
மூலம் : ஜேம்ஸ் பால்ட்வின்
தமிழில் : ஜோசப் ராஜா
நன்றி : அண்ணன் செழியன் அவர்களுக்கு
1 comment
ஓர் அருமையான போர் எதிர்ப்புக் கவிதையைச் சிறந்த அறிமுகத்துடன் பதிவு செய்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
அவசியம் வாசியுங்கள். அது போருக்கெதிராக செயல்பட உங்களைத் தூண்டும்.