குழந்தை பிறப்பின்
ஒவ்வொரு கதைகளையும்
கேட்கும்போதெல்லாம்
இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்
இந்த மனிதர்கள்
வாழ்க்கை முழுவதும் காத்திருப்பதெல்லாம்
குழந்தைக்காகத் தானோவென்று
குழந்தை பிறந்திருக்கிறது
என்ற செய்தியைச் சொல்லும்போது
கண்ணீர்விட்டு அழுதவனைப் பார்த்திருக்கிறேன்
வானத்துக்கும் பூமிக்கும்
குதித்தவனைப் பார்த்திருக்கிறேன்
வார்த்தைகள் வெளிவராமல்
காற்றில் வரைந்தவனைப் பார்த்திருக்கிறேன்
குழந்தையின் பிறப்பு
குடும்பத்தின் ஒவ்வொரு இதயங்களிலும்
மகிழ்ச்சியின் பூக்களை
மலரச்செய்யக் கூடியது
குழந்தையின் பிறப்பு
ஆணுடைய உலகத்தையும்
பெண்ணுடைய உலகத்தையும்
தலைகீழாகத் திருப்பிப் போடக்கூடியது
நானும்கூட
என் மகள்கள் பிறந்த
மறக்கமுடியாத அந்தப்
பரவசத்தின் நொடிகளை
நினைத்துப் பார்க்கிறேன்
உங்களுக்கும் கூட
பதிவு செய்யப்பட்ட
பிறப்புச் சான்றிதழைக்
கையில் வாங்கியபோது
கண்கள் நிறைந்திருக்கும்
சிலிர்க்க வைக்கக்கூடிய
அந்த நினைவுகள்
மேலெழும்பி வரக்கூடும்
ஆனால்
என் அன்பிற்குரியவர்களே
எல்லோருக்கும் இந்த மகிழ்ச்சி
இப்படியே கிடைத்துவிடுவதில்லை
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழே
பெரும் சுமையாகிப்போன
ஒருவனின் கதையை
உங்களுக்குச் சொல்ல நினைக்கிறேன்
காட்டுமிராண்டிகளால்
சுடுகாடாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்
காஸாவில் வசித்துக் கொண்டிருக்கும்
அபு அல் குஸாமிற்கு
அல்லாவின் கிருபையால்
இரட்டைக் குழந்தை பிறக்கிறது
அந்தத் துயரத்திலும்
அப்படியொரு மகிழ்ச்சி
நிறைத்துக் கொள்கிறது அந்தவீட்டை
ஓயாத குண்டுச்சத்தங்களுக்கு இடையில்
அந்தக் குழந்தைகளின் அழுகை
இசையாய் இசையாய் இசையாகவே
இசைத்துக் கொண்டிருக்கிறது
அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை
கொஞ்சுகிறாள் தாய்
கொஞ்சுகிறான் தகப்பன்
கொஞ்சுகிறாள் பாட்டி
குழந்தைகள் கொஞ்சப்பட வேண்டியவர்கள்
என்பது
ஒரு முட்டாளுக்கும் கூட
தெரியுமென்றுதான் நினைத்திருந்தேன்
நான்கு நாட்கள் கழித்து
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை
வாங்குவதற்காக
அரசு அலுவலகம் செல்கிறான்
அபு அல் குஸாம்
பிறப்புச் சான்றிதழை
மகிழ்ச்சியோடு வாங்கியவனுக்கு
பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து
அழைப்பு வருகிறது
சொல்லமுடியாமல் தவிக்கிறார் அழைத்தவர்
கேட்கமுடியாமல் துடித்தவன்
பிறப்புச் சான்றிதழோடு விரைகிறான்
அவனால் நம்பமுடியவில்லை
சிலமணி நேரங்களுக்கு முன்னால்
அங்கிருந்த அவனுடைய
வீட்டிலிருந்துதான் புறப்பட்டிருந்தான்
வீடு இருந்ததற்கான
எந்தத் தடயங்களும் இல்லை
அப்படியென்றால் அம்மா
அப்படியென்றால் மனைவி
அப்படியென்றால் இரண்டு குழந்தைகள்
அவ்வளவுதான்
அந்தக் காட்சியை
அதற்குமேல் விவரிக்காமல்
அப்படியே விட்டுவிடவே நினைக்கிறேன்
ஆனால்
பிள்ளைகள் இல்லாத
அந்தப் பிறப்புச் சான்றிதழ்
வாழ்வு முழுவதும் வதைக்குமே
ஓ
நாசமாய்ப் போகட்டும் யுத்தவெறியர்கள்
நாசமாய்ப் போகட்டும் யுத்தவெறியர்கள்!
ஜோசப் ராஜா