திரைப்படமும் கவிதையும்

இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ராங்கி திரைப்படம் பெரிதாகப் பேசப்பட வேண்டிய ஏகாதிபத்திய அரசியலைப் பேசியிருந்தாலும் கூட, இங்கு பெரிதாகப் பேசப்படாதது வருத்தம்தான். ஒட்டுமொத்த இலக்கியமும் கலையும் பொழுது போக்குக்காக மட்டும்தான் என்று விடாப்பிடியாக இருப்பவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

லிபியாவின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போராளிகளில் ஒருவனான ஆலீம், முகநூல் வழியாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை நேசிக்கிறான். உரிமையைத் தாழ்மையாகக் கேட்க முடியாது என்று சொல்கிறவனின் வழியாக அஹிம்சையைக் கேள்விக்குள்ளாக்குகிறார் இயக்குநர்.  அமெரிக்காவாலும், நேட்டோவாலும் எண்ணெய் வளத்திற்காகக் கபளீகரம் செய்யப்பட்ட மத்தியகிழக்கு நாடுகளின் கதையைச் சொன்னதற்காகவே கண்டிப்பாகப் பாராட்டலாம்.

தீவிரவாதி என்று சொல்கிறவனுக்கும், போராளி என்று சொல்கிறவனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமே, நேட்டோவை ஆதரிப்பவனுக்கும், நேட்டோவை எதிர்ப்பவனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்பது கவனமாகப் புரிந்துகொள்ளக் கூடிய உண்மை. அணு ஆயுதம் இருக்கிறது என்ற பொய்க்குற்றச்சாட்டின் பேரில் ஈராக் அதிபர் சதாம் உசைன் கைதுசெய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டபோது, லிபியாவின் அதிபராக இருந்த கடாஃபி கேட்டார், சதாமோடு எங்களுக்கு ஆயிரம் முரண்கள் இருக்கலாம், ஆனால் அமெரிக்காவிற்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்று. தொடர்ந்து நேட்டோவின் சூழ்ச்சியால் கடாஃபி கொல்லப்பட்ட போது பேச யாருமில்லாதது வரலாற்றுத் துயரம்.

ஆனால் ஆயுத வியாபாரத்தின் கோரத்தைச் சொல்ல, அமெரிக்க இராணுவத்தின் அட்டூழியங்களைச் சொல்ல, படுகொலை செய்யப்பட்ட ஒரு தேசத்தின் அதிபருக்காகப் பரிந்துபேச தமிழில் ஒரு திரைப்படம் எடுக்கப்படும் என்று நம்பமுடியுமா? நம்புங்கள் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் கூட அந்தத் துணிச்சலும், அந்த நேர்மையும், அந்தக் கலையுள்ளமும் வரவேற்கக் கூடியதே!

அமெரிக்க ராணுவமும் நேட்டோ படைகளும் மத்திய கிழக்கு நாடுகளில் நுழைந்த நாட்களிலிருந்து இன்றுவரை, நேட்டோவை எதிர்த்து தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவன் என்ற முறையில், அந்த எதிர்ப்பை எங்கிருந்தோ ஒரு இதயம் திரையில் அழுத்தமாய்ப் பதிவுசெய்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் காட்சிக்காகவும் இந்தக் கவிதைக்காகவும்தான் இதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இறுதிக் காட்சியில் அமெரிக்க ராணுவவீரர்களால் சுடப்பட்டுத் தன்னை அறியாத, தானறிந்த காதலியின் அருகில் வீழும்போது அந்தப் போராளி ஆலீம் இப்படிச் சொல்கிறான் அவளிடம்,

லிபியாவில்

எண்ணெய் வளம் மட்டும்

இல்லாமல் இருந்திருந்தால்

நானும் கடாஃபியும்

கொல்லப்பட்டிருக்க மாட்டோம்

உனது நாட்டிலும்

கனிமவளங்கள் இருக்கிறது காதலியே

ஜாக்கிரதையாக இரு!

இந்த எச்சரிக்கை அந்தக் காதலிக்கு மட்டுமா? நம் எல்லோருக்குமான எச்சரிக்கையல்லவா? இதோ மத்திய கிழக்கு நாடுகளைச் சின்னாபின்னமாக்கிய நேட்டோ, உக்ரைனின் வழியாக இரஷ்யாவோடு யுத்தத்தில் இருக்கிறதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற கேள்விகள் கண்டிப்பாகக் கேட்கப்பட வேண்டியவை.

இன்னும் ஆழமாய் இன்னும் சுதந்திரமாய் உங்களிடமிருந்து வரப்போகும் படைப்புகளுக்கு வாழ்த்துகள் இயக்குநரே!

Related Articles

Leave a Comment