தவாரிஷ் லெனின்

வாழ்த்துரை_தோழர். நல்லகண்ணு

வாழ்த்துரை_தோழர். நல்லகண்ணு

கவிஞர். ஜோசப் ராஜா எழுதிய ‘‘ தவாரிஷ் லெனின் ’’ கவிதையைப் படித்தேன். காலத்தின் தேவை கருதி இந்தக் கவிதை நூலாக வெளிவருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலக நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திவந்த ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து உலகக் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன.

ஏகாதிபத்திய இணைப்புச் சங்கிலியில் இத்துப் போயிருந்த ரஷ்யாவின் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து, தோழர் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி போராடி வெற்றி பெற்றது.

1917 – ல் ரஷ்யாவில் ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டது. சோவியத் யூனியன் உருவாகியது.

லெனின் தலைமையில் அமைந்த சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசாக மலர்ந்தது.

விவசாயிகளுக்கு எல்லாக் கடன்களும் ரத்து செய்யப்பட்டது.

நிலபிரபுத்துவ குலாக் முறை முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டது.

அனைவருக்கும் நிலங்கள் சொந்தமாக்கப்பட்டது.

கல்வியும், மின்சாரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

உலகெங்கும் சமாதானத்தை நிலைநிறுத்துவதே சோவியத் ஆட்சியின் லட்சியம் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டது.

நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைவருக்குள்ளும் வேற்றுமையில்லா தோழமை உறவு வளர்ந்து வந்தது.

தோழமையின் உறவை வெளிப்படுத்துவதே ‘‘ தவாரிஷ் ’’ என்ற ரஷ்யச் சொல்லாகும். தவாரிஷ் என்பதற்கு தமிழில் தோழன் – தோழமை என்று பொருள்படும்.

சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த உறவின் சொல்லே தாவரிஷ் என்பதாகும்.

யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களை செஞ்சேனையைச் சேர்ந்தவர்கள் மீட்டு கப்பலில் பீட்டர்ஸ்பர்க் அழைத்து வருகிறார்கள்.

துறைமுகத்தில் இறங்காமல், இங்கேயும் என்ன நேருமோ என்று பயங்கலந்து பார்த்துக் கொண்டிருந்த பாலியல் தொழிலாளிகளை செஞ்சேனை வீரர்கள் ‘‘ தோழரே ’’ என்றழைத்து பயமில்லாமல் இறங்கச் சொல்கிறார்கள்.

புதிய சமூகத்தின் புதிய மனிதர்கள் அன்போடும், மரியாதையோடும் தோழமை உறவை இறுகப் பற்றிக் கொள்கிறார்கள்.

மாபெரும் மார்க்சிய மேதை : சோசலிச புரட்சியை நடத்திக்காட்டிய, பாட்டாளி வர்க்க ஆட்சியையும் நிறுவிக் காட்டிய லெனினை உலகமே பாராட்டியது.

சோவியத் புரட்சியை ‘‘ யுகப்புரட்சி ’’ என்று மகாகவி பாரதி பாராட்டினார்.

‘‘ சோற்றுக்குப் பஞ்சமில்லை ; போரில்லை ; துன்பமில்லை ; போற்றற் குரியான் புது மன்னன், காணீரோ ! ’’

என்று காக்கைகள் சொல்லிக் கொண்டதாக தன் கருத்துக்களை கவிதையாக எடுத்துரைத்தார் மகாகவி பாரதி.

பேய்க்கூட்டம் என்றொரு கட்டுரையில் ‘‘ உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி, லெனினுக்கு லட்சம் பக்கத்திலே ! ’’

என்று லெனின் மீதும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதும் வைக்கப்பட்ட விமர்சனங்களை அறிவதாகவும், அதை நினைத்து தூக்கமே வரவில்லை என்றும் எழுதுகிறார்.

தவாரிஷ் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து காட்டியவர் மாமேதை லெனின்.

கவிஞர். ஜோசப் ராஜா எழுதிய கவிதைக்கும் தவாரிஷ் என்று தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

கவிஞர் மாணவராக இருந்த காலத்திலிருந்தே மார்க்ஸையும் , லெனினையும் படித்தறிந்தவர்.

அறிவியல் முறையில் ஆய்ந்தறிந்து கவிதைகளை இணைத்திருப்பது படிப்பவர்களை வியக்க வைக்கிறது.

‘‘ கணிதத்தில் நிபுணனராய்

விடையை முன்னுணர்ந்தவராய்ச்

சொல்லி வைத்தாற் போல்

கருத்தை பெளதீக சக்தியாய்

மாற்றிக் காட்டினார் அவர். ’’

என்று லெனினையும், சோசலிசப் புரட்சியையும், புரட்சியை வெற்றிகரமாக்கிய உழைக்கும் வர்க்கத்தையும் சிறப்பிக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் திரிபுராவில் நடந்த தேர்தலில் இடதுசாரிகளின் கட்சி தோற்கடிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து மதவெறி சக்திகள் லெனின் சிலையை உடைத்ததையும், மதவெறி சக்திகளின் வெறியாட்டத்தையும்.

‘‘ லெனின் சிலை

பார்ப்பவர்களுக்கு எதையும்

சொல்லிவிடக் கூடாது என்ற

அச்சத்தின் ஆட்டமல்லவா அது. ’’

என்று சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், மதவெறியர்களின் வெறிச் செயலுக்கு . . .

கண்டனப் பேரணிகளும்

கண்டன அறிக்கைகளும்

ஜனநாயக நீதிபோதனைகளும்

அவர்களுக்கு போதுமென்று நினைக்கிறீர்களா !

என்று கேட்கிறார்.

இறுதியாகக் கவிஞர் சொல்கிறார் . . .

‘‘ முன்னிலும் வேகமாக மக்களிடம் செல்லுங்கள்

லெனினை இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்

உழைக்கும் வர்க்கம் பிரசவிக்கப் போகும்

புதிய இந்தியாவில் ஒளிராதோ லெனினின் சிலைகள் ! ’’

என்று எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் கவிதையை நிறைவு செய்கிறார்.

கவிஞர். ஜோசப் ராஜாவின் தவாரிஷ் லெனின் என்ற இந்தக் கவிதையானது களப்பணியாளர்களுக்கு கருத்தாயுதமாகப் பயன்படும் !

கவிஞருக்கு வாழ்த்துக்கள் !

தோழமையுடன்

இரா. நல்லகண்ணு

சென்னை

4.4.2018

Related Articles

Leave a Comment