ஜமா – எளிமையின் பேரழகு

மீபகாலங்களாக எளிய வாழ்க்கைப் பின்னணி கொண்ட கலைஞர்கள் திரைப்படத் துறைக்குள் நுழைந்து, எளிமையான அதேநேரத்தில் ஆழமான கதைகளால் பார்வையாளர்களுக்குப் புதுமையான அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எளிய வாழ்க்கைப் பின்னணி கொண்ட கலைஞர்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தத்தான் வேண்டுமா என்று கேட்கலாம் நீங்கள். வேறு வழியில்லை சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால், சினிமா என்பது வெகுஜன ரசனைக்குரியதாக மட்டுமே பார்க்கப்படுவதால், ஆதிமுதல் அந்தம் வரை சந்தையின் கைகளிலே அத்தனையும் இருக்கிறது. வியாபாரத்தின் வலிமையான கரங்களைத் தாண்டி தன்னை நிரூபிக்க, தான் யாரென்று காட்டிவிட ஒருவன் செலுத்த வேண்டிய உழைப்பு இருக்கிறதே, அது சொல்லித் தீராதது. சொல்லிலும் அடங்காதது. அப்படிப்பட்ட உழைப்பின் வழியாக ஒரு எளிய மனிதன் சிகரத்தை எட்டிப்பிடிப்பது வரவேற்கத்தக்கதுதானே!

உண்மை என்னவென்றால், ஒரு நல்ல கதையை எளிதாக எழுதிவிடலாம். ஆனால் அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. கதைகளை வைத்துக்கொண்டு, கதைகளுக்காக அலைந்து கொண்டு, சதா சினிமாவை மட்டுமே சிந்தித்துக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பவர்களில் ஒருவரையாவது தினம் சந்தித்துவிடுகிறேன். நம்பிக்கையைத் தாண்டி வாழ்க்கையின் எதார்த்தத்தால் சுக்குநூறாக உடைக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஆனாலும், அத்தனையையும் தன்னைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் அத்தனையையும் பார்த்துக்கொண்டே, இயல்பை மீறி முயற்சித்துக் கொண்டிருப்பவர்களே, தன்னை இழந்து விடாமல் இருப்பவர்களே ஒருகட்டத்தில் நினைத்ததைச் செய்து முடிக்கிறார்கள். எளிய மனிதர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று ஏன் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அப்போதுதான் எளிய மனிதர்களின் பிரச்சனைகள் புரிந்துகொள்ளப்படும், தீர்க்கப்படும். அப்படித்தான் எளிய மனிதர்கள் தங்களை வளர்த்துக்கொண்டு கலைஞர்களாக உருமாறும் போது, ஒன்றுமில்லை அவர்களின் கலைகளில் எளிய மனிதர்கள் கதையின் நாயகர்களாக மாற்றப்படுவார்கள்.

பாட்டாளிவர்க்க இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படும் மக்சீம் கார்க்கி எழுதத் தொடங்கிய பிறகுதான் இந்த உலகத்தின் இலக்கியங்கள் அதுவரை எழுதியிராத ஏன் நினைத்தே பார்த்திராத தொழிலாளர்கள் எல்லாம் கதைமாந்தர்களாக கதையின் நாயகர்களாக உருவாக்கப்பட்டார்கள். பாப்லோ நெருடா என்ற பெரும் இடதுசாரிக் கவிஞன்தான் சுரங்கத் தொழிலாளர்களுக்காக கவிதை எழுதினான். தக்காளிக்கும், பூண்டுக்கும், வெங்காயத்திற்கும் கவிதை எழுதினான். சார்லி சாப்ளின் என்ற உன்னதமான கலைஞன்தான் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை, விலக்கப்பட்டவர்களை, கேள்வி கேட்க நாதியில்லாதவர்களை தன்னுடைய திரைப்படத்தின் நாயகர்களாக்கி இந்த உலகத்தின் சமமின்மையை கேள்வி க்குள்ளாக்கினான்.

கலைக்கு இது புதிதொன்றுமில்லை, சினிமாவிற்கும் இது புதிதில்லைதான். அந்த வகையில் தன்னுடைய நீண்ட உறக்கத்தைக் கலைத்து தமிழ் சினிமா மெல்லக் கண்விழித்துக் கொண்டிருக்கும் காலம் இதுவென்று நிச்சயமாகச் சொல்லலாம். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம்தான், நல்லவற்றைக் கொண்டாடவும், தீயதை யோசிக்காமல் புறக்கணிக்கவும் நாம் பழகிவிட்டால், நன்மையே இனி நடக்கும் என்று நம்பலாம்.

கூத்துக்கலையை அடிப்படையாகக் கொண்டு பாரி இளவழகனின் இயகத்தில் சமீபத்தில் வெளிவந்த ஜமா திரைப்படத்தை பார்த்து முடித்து இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. ஆனாலும் அந்த எளிய கதையும், அந்த எளிய காட்சியனுபவமும் இன்னும் இதயத்திற்குள் அங்குமிங்கும் அலைந்தாடிக் கொண்டிருக்கிறது. கலைஞனாகத் தன்னை நிரூபிக்கப் போராடும் போராட்டம் திரையிலும் சரி வாழ்க்கையிலும் சரி வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கும் நாயகனைப்போலவே நானும்கூட மகிழ்ச்சியடைகிறேன். கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை கூத்தில்லாமல் சொல்லமுடியுமா என்ன? கூத்தும், வாழ்வும் நம்மைக் கொஞ்சநேரம் கைப்பிடித்து காடுமேடெல்லாம் அழைத்துச்சென்று கடைசியாகக் குருஷேத்திரத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

படத்தைப் பார்த்துமுடித்து, மகாபாரதம், திரெளபதி, கர்ணன், அர்ச்சுணன் என்று தொடர் கேள்விகளால் உரையாடலை நீளச் செய்திருந்த மகள் கடைசியாக கேட்டாள். இவர்களுக்கு (கூத்துக்கலைஞர்களுக்கு) மகாபாரதக் கதையை யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று. அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதா, என் அன்பு மகளே, வியாசனுக்கே பாரதக் கதையைச் சொல்லிக்கொடுத்தவர்கள் கூத்துக்கலைஞர்கள். பெருங்கவிஞர்கள் பெருங்காப்பியங்களைப் படைக்கும் முன்னமே வாய்வழிப்பாடல்களாக, கூத்துக்கலையின் வழியாகப் பாரதக் கதைகளையும், இராமாயணக் கதைகளையும், சிலப்பதிகாரத்தையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வடிவத்தில் நடத்தியவர்கள் இந்தக் கலைஞர்கள்தான் என்றேன். ஆச்சரியத்தில் அவள் முகம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கலையின் நோக்கம் அகத்தையும் புறத்தையும் ஒருங்கே பிரகாசிக்கச் செய்வதாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் ஜமா உள்ளும் புறமும் உற்சாகம் கொள்ளச் செய்கிறது.

இந்த மண்ணின் மகத்தான இசைக்கலைஞரான இளையராஜாவின் இசையில் ஒரு கிராமத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜமாவிற்குள் நடக்கும் இதயப் போராட்டங்களை காட்சி ஊடகத்தின் வழியாகப் பார்ப்பது நல் அனுபவமாகவே இருக்கிறது. எங்கு தேவைப்படுகிறதோ அங்கு இசைத்திருக்கிறார். எளிமையில் எல்லாமும் அழகாக மாறுவதைப்போல இசையும் கூட உன்னதமான ஒன்றாக மாறிப்போகின்றது.

இதயத்தில் கொஞ்சம் நஞ்சைச் சுமந்துகொண்டிருக்கும் கூத்து வாத்தியார், ஒருகட்டத்தில் கலையின் உன்னதத்திற்கு முன்னால் தன்னுடைய பிடிவாதத்தை விட்டுவிட்டு, தன்னுடைய கர்வத்தை தொலைத்துவிட்டு குந்தியைத் தன்முன்னால் அச்சுப்பிசகாமல் கொண்டுவந்து நிறுத்திய வயதில் குறைந்த சககலைஞனின் காலடியில் வீழும் காட்சி, இந்தப் பாழாய்ப்போன மனிதர்களால் அவ்வளவு எளிதாக அணைந்துகொள்ள முடியாத காட்சி. ஏனென்றால் ஈகோ உச்சத்தில் இருக்கும் சமூகமைப்பு இது. யாருக்கும் யாரும் தேவையில்லை என்றபடி சந்தை உறவுகளை சில்லுசில்லாகச் சிதறடித்திருக்கும் இப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து இம்மாதிரியான கதைகள் வருவது நிச்சயம் வரவேற்கத் தக்கதுதான்.

பணம் எல்லாவற்றையும் தீர்மாணிக்கத் தயாராக இருக்கும்போது. இல்லை நானே தீர்மானிப்பேன் என்று சொல்லிச்செய்த இயக்குநர் பாரி இளவழகனை பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறது இந்தச் சமூகம். அந்தக் கூத்தை இதுவரையிலும் பார்க்கவில்லையென்றால் ஒருமுறை பார்த்துவிடுங்கள். நீங்கள் பார்ப்பதற்காகத்தான் ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த நிலத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன கூத்துக்கலைகள். இயல் இசை நாடகம் என இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை அம்சங்களையும் பிரசவித்துப் போட்ட ஆதித்தாய் இந்த கூத்துக்கலைதான்.

கூத்துக்கலைஞர்கள் தான்

இந்த மண்ணில்

காலங்காலமாகத்

தெய்வங்களை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள்

கூத்துக்கலைஞர்கள் தான்

இந்த மண்ணின்

மாமனிதர்களின் வீரக்கதைகளை

காலங்காலமாகத்

கடத்திக் கொண்டிருக்கிறார்கள்

கவிஞர்களின் கவிஞர்கள்

அவர்கள்தான்

கலைஞர்களின் கலைஞர்கள்

அவர்கள்தான்

அவர்களின் வாழ்க்கையை, அந்த வாழ்க்கையின் பாடுகளை, அந்த வாழ்க்கைக்குள்ளிருக்கும் காதலை, கண்ணீரை, மகிழ்ச்சியைப் பார்க்கச் சலிக்காமல் காட்சிப்படுத்தியதற்காக வாழ்த்துகள் கலைஞனே, இதே பாதையில், இதே தாகத்தோடும், இதே பசியோடும் இன்னும் முன்னேறிச் செல்க. அதுதான் என் எதிர்பார்ப்பும், அதுதான் என் விருப்பமும்.  

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment