காத்திருக்கும் சாவிகள்

இந்தக் கவிதையை

இப்படித்தான் தொடங்க நினைக்கிறேன்

ஒவ்வொரு முறையும்

உங்கள் வீட்டைப் பூட்டும்போதும்

ஒவ்வொரு முறையும்

உங்கள் வீட்டைத் திறக்கும்போதும்

சாவிகளுக்கும்

மனிதர்களுக்குமான உறவை

நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள்

ஆனபோதிலும்

சாவிகளுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும்

இடையிலான உறவை

இந்த உலகத்தில்

யாரோடும் உங்களால்

ஒப்பிட்டுப் பார்க்க முடியாது

நினைத்துப் பாருங்களேன்

உங்களிடம் சாவி இருக்கிறது

உங்களுக்கென்று வீடு இல்லை

என்று சொன்னால்

எப்படி இருக்கும் உங்களுக்கு

பாலஸ்தீனர்களிடம்

அப்படித்தான் சொன்னார்கள்

அந்த ஆக்கிரமிப்பாளர்கள்

எதுவும் செய்ய முடியவில்லை

எழுபத்தைந்து வருடங்கள்

கடந்தோடி விட்டது

ஆனால்

அகதிகளாக்கப்பட்ட அந்த மக்களின்

கைகளில் இருக்கும் சாவிகள்

இப்போதும்

தங்கள் கதவிற்காகக்

காத்துக் கொண்டிருக்கின்றன

அகதிகளாக்கப்பட்ட அந்த மக்கள்

இப்போதும்

தங்கள் வீட்டிற்காகக்

காத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆம் தோழர்களே

இது நீண்டகாலக் கதை

ஆம் தோழர்களே

இது நீண்டகால வேதனை

ஆம் தோழர்களே

இது நீண்டகால ஏமாற்றம்

ஆம் தோழர்களே

இது நீண்டகாலக் காத்திருப்பு

இப்போது நடந்து கொண்டிருக்கும்

இன அழிப்பைப் போல

இதற்கு முன்னாலும் நடந்த காலத்தில்

அகதிகளாகத் துரத்தப்பட்ட

பாலஸ்தீனியர்களின் வீடுகளைத்

திட்டமிட்டு அபகரித்துக் கொண்டார்கள்

வெறியூட்டப்பட்ட மனிதர்கள்

அகதிகள் என்ற பெயரோடு

எங்கெங்கோ ஒட்டிக் கொண்டிருந்த

பாலஸ்தீன தேசத்தின் மக்கள்

எப்போதும் நீங்காத

சொந்த மண்ணின் நினைவுகளோடு

திரும்பி வந்த பொழுது

வீடு அங்கேதான் இருந்தது

ஆனால்

அந்த வீடு அவர்களுடையதாக இல்லை

சாவிகள் கையில் இருந்தது

ஆனால்

அந்தச் சாவிகளுக்கு வேலையில்லாமலிருந்தது

அப்போதுதான்

அந்த யுத்தத்தின் காரணம்

அவர்களுக்குப் புரியத் தொடங்கியது

அந்த இனஅழிப்பின் வேகம்

அவர்களுக்கு விளங்கத் தொடங்கியது

எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்

நக்பா என்றழைக்கப்படும் அந்தப் பேரழிவு

எதற்காக நடத்தப்பட்டதோ

அதற்காகத்தான்

இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது

இப்படிப்பட்ட பேரழிவிற்கு நடுவிலும்

இன்னும் எதற்காக அங்கே

இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்

அதைப்போலவே

இன்னும் எதற்காக இத்தனை வருடங்களாக

சாவிகளோடு காத்திருக்கிறார்கள் என்பதையும்

புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்

துரத்தப்பட்ட பாலஸ்தீனியர்கள்

அவர்களுடைய தேசத்திற்காகத்தான்

சாவிகளோடு காத்திருக்குறார்கள்

அவர்களுடைய நிலத்திற்காகத்தான்

சாவிகளோடு காத்திருக்குறார்கள்

அவர்களுடைய வீட்டிற்காகத்தான்

சாவிகளோடு காத்திருக்குறார்கள்

அந்தச் சாவிகள்

அவர்களுடைய சொந்த வீட்டை மட்டுமல்ல

இந்த உலகத்தின்

ஒவ்வொரு இதயங்களையும்

திறக்குமென்று உறுதியாக நம்புகிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

4 comments

பெரணமல்லூர் சேகரன் 22/11/2023 - 12:47 PM

“காத்திருக்கும் சாவிகள்” என்னும் கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையை வாசிக்கும்போதே பாலஸ்தீனத்தில் பேரழிவுகளைச் சந்தித்து வரும் மக்கள் போரின் விளைவால் வீடற்றவர்களாக உறவற்றவர்களாக இருக்கும்போது வீட்டின் சாவிக்குத் தேவை எழவில்லை. ஆனால் பூட்டப்பட்டிருக்கும் இதயங்கள் திறந்தால் தானே போர் நிறுத்தம் ஏற்படும். அதற்கான சாவியாக உந்துசக்தியாக அமையட்டும் இந்தக் கவிதை. வாசியுங்கள். நண்பர்களை வாசிக்கச் சொல்லுங்கள்.

Reply
aji murugesan 22/11/2023 - 1:39 PM

தட்டிப் பார்ப்போம்..
திறக்க மறுத்தால் தகர்த்தெறிவோம்.. என்கிற சிந்தனையைச் சாமானியர்கள் கையிலெடுத்தால் ஆதிக்கம் என்னவாகும்?

Reply
முனைவர் பெ.அண்ணாதுரை 22/11/2023 - 2:54 PM

மனம் திறக்கும் மனம் திறந்த கவிதை.பாலஸ்தீன மக்களின் உள்ள எண்ணத்தை உறுதிப்படக்கூடும் கவிதை. நெடுங்காலமா விடிய நடந்துபோராட்டம். இரண்டாம் உலகப்போரின் மக்களே வெற்றி போராட்டத்தின் நடுவில் உருவான ஆக்கிரமிப்பு இது. அரபு மக்களின் போராட்டத்தில் விளைவாக புதிதாக உருவாக வேண்டிய நாடு பாலஸ்தீனம். உலக நாட்டு மக்களின் போராட்டத்தால் உந்து சக்தியை கொடுக்க முடியும். உலக வரலாற்றிலன் காலம் இன்னும் தன் சாவியை சரியாக பொருத்தாமல் இருக்கும் வரை இந்த நிலையை சகிக்க முடியாது. இத்தகைய கவிதைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் பாலஸ்தீனம் என்ற மக்களின் நாடு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.சாவிக்கு வேலை உண்டு. தொடர்ந்துகொண்டே இருங்கள். கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

Reply
மைத்திரிஅன்பு 26/11/2023 - 10:28 PM

வாழ இடமளித்த நேயத்திற்கு கிடைக்கும் பரிசாக – முகவரியற்ற போராட்டக்களம் கிடைத்த வரலாற்றை சாவிகளின் காத்திருப்பின் வழியே இக்கவிதை விவரிக்கிறது. சாவிகள் மட்டுமின்றி கவிஞரின் கவிதைகளும் இன்னும் இன்னும் கிடைக்க வேண்டிய விடுதலைக்கான காத்திருப்புகளை அர்த்தப்படுதுகின்றன. காத்திருப்புகள் வெறும் காத்திருப்புகள் இல்லை. புயலாக வெளிப்படக்கூடிய புறப்பாடுகளின் ஆயத்தம் என்பதையும் உணர்த்துகிறது இக்கவிதை.

Reply

Leave a Comment