என் பெயர் நஜ்வா

த்து வயதான

பாலஸ்தீனச் சிறுமி

நஜ்வாவைப் பற்றிய

அந்த ஆவணப்படம்

இப்படித்தான் தொடங்குகிறது

குண்டுவீசிக் குதறப்பட்ட

கட்டிடக் குவியல்களின்மீது

மெல்ல ஏறுகிறாள் நஜ்வா

சுற்றிலும் பார்க்கிறாள்

எங்கும்

எங்கெங்கும்

கட்டிடக் குவியல்கள்தான்

மூச்சை ஆழமாக இழுக்கிறாள்

நீண்ட நேரம்

எதுவும் பேசாமல்

தலைகுனிந்தபடி இருக்கிறாள்

மீண்டும் சுற்றிலும் பார்க்கிறாள்

இதுதான் எங்கள் தெரு

ஆனால்

எங்கள் வீடு

எதுவென்று தெரியவில்லை

என்று சொல்லும்போது

அந்தச் சின்ன இதயம்

உடைந்து சிதறுகிறது

அந்தச் சின்னக்கண்களில்

கண்ணீர் பேரரருவியாய்

வழிந்தோடுகிறது

கண்களைத் துடைத்துக்கொண்டு

கட்டிடக் குவியல்களிலிருந்து

மெல்ல இறங்குகிறாள்

மீண்டும் நடக்கிறாள்

முக்கால்வாசி சிதைந்திருக்கும்

பள்ளிக்கூடத்தைக் காட்டுகிறாள்

இப்போது

இன்னும் அவள் கண்கள்

அதிகமாய்க் கண்ணீர் சிந்துகின்றன

குண்டுவீசித்

தகர்க்கப்பட்டிருக்கும்

மருத்துவமனையை

குழந்தைகள் விளையாடும்

பூங்காவை என

ஒவ்வொன்றையும் பார்க்கும்போது

அவளுக்கு புரியத் தொடங்குகிறது

யுத்தம் என்பது என்னவென்று

நஜ்வா

நஜ்வா

என்று அழைக்கிறார்கள்

கட்டிட இடிபாடுகளின்மீது

விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள்

அவள் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டாள்

அந்தப் பொம்மைகள்

அந்தப் புத்தகங்கள்

அவளுடைய விளையாட்டுப் பொருட்கள்

என எடுக்க எடுக்க

அழுகை பீறீட்டுக்கொண்டு வருகிறது

அந்த இடிபாடுகளுக்குள்ளிருந்து

துருப்பிடித்த சாவியொன்றை

எடுக்கிறாள் நஜ்வா

எல்லாவற்றையும் போட்டுவிட்டு

சாவியை எடுத்துக்கொண்டு

நிமிர்ந்து நிற்கிறாள்

ஆவணப்படம் எடுப்பவன்

கையில் என்னவென்று கேட்கிறான்

அபகரிக்கப்பட்ட

என்னுடைய பாட்டி வீட்டின்

சாவி இது

என் முன்னோர்கள்

போராடுவதற்கான நியாயமும்

எங்கள் எதிரிகள்

போர்த்தொடுப்பதற்கான காரணமும்

மனிதர்களைக் காட்டிலும்

இந்தச் சாவிக்குத் தெரியும்

என்று சொல்லிவிட்டு

சாவியை இறுகப்பற்றிக்கொண்டு

அந்த இடிபாடுகளில் இருந்து

இறங்குகிறாள் நஜ்வா

நஜ்வாவின் கையிலிருப்பது

அபகரிக்கப்பட்ட

அவளுடைய பாட்டி வீட்டின்

சாவி மட்டுமல்ல

சாவி மட்டுமல்ல!

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 27/10/2024 - 10:29 AM

பாலஸ்தீன சிறுமி நஜ்வா மூலம் போரின் விளைவுகளை வெளிப்படுத்துகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசியுங்கள். உங்களையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

Reply

Leave a Comment