உன்னை மீண்டும் சந்திப்பேன்

எனக்காகக் காத்திருக்காத போதிலும்

என்னைவிட்டு விலகிச் சென்ற போதிலும்

என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காத போதிலும்

என் பற்றுதலை உதறித் தள்ளிய போதிலும்

என் முத்தங்களைத் துடைத்தழித்த போதிலும்

எப்போதுமே

என் பாதைகளுக்கு எதிர்திசையில்

செல்கின்ற போதிலும்

உன்னை மீண்டும் சந்திப்பேன் நான்

மழையில் உருளும் ஒளிரும் திவலையாய்

காற்றில் பரவும் மகரந்த மணமாய்

பகலில் சிதறும் சூரிய ஒளியாய்

வெயிலில் வழியும் வியர்வைத் துளியாய்

ஒளியாய் இருளாய் விடவே மாட்டேன் உன்னை

கொடுஞ் சூறாவளியின் மையப்பகுதியாய்

சுற்றிச் சுழலுவேன்

இடப்பக்கம் வலப்பக்கம் எப்பக்கமும்

நீ போகும் இடமெல்லாம்

நீக்கமற நிறைந்திருப்பேன்

எங்கு எப்படி என்று

உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும்

உன்னை மீண்டும் சந்திப்பேன் நான்

உன்னுடைய காகிதத்தில் கோடுகளாய்

உன்னுடைய தூரிகையின் வண்ணங்களாய்

உனக்கும் எனக்கும்

இடைவெளியே இல்லாமல் செய்வேன்

நீ தனிமையை விரும்பினாலும்

உன்னைத் தனித்திருக்க விடேன்

உன்னோடு உறவாட உன்னோடு கலந்தாட

நிச்சயத்திலும் நிச்சயமாக

உன்னை மீண்டும் சந்திப்பேன் நான்

தனித்தலையும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை

தனித்தலையும் யாரும் நிம்மதியாக இல்லை

தனித்திராதே சேர்ந்து கொள்

என்னோடு சேர்ந்து கொள்

நான் பாடுகிறேன் நீ ஆடு

வார்த்தைகள் ஓயாமல் ஒலிக்க ஒலிக்க

பாதங்கள் ஓயாமல் ஆட ஆட

நெடுங்காலமாய் அசைவின்றிக் கிடக்கும்

அத்தனை உயிர்களும் பாடட்டும் ஆடட்டும்

சிரிக்காத மனிதர்கள் சிரிக்கட்டும்

பேசாத உதடுகள் திறக்கட்டும்

ஆடாத கால்கள் ஆடட்டும்

சந்தமும் ஜதியும் ஒன்றாய்க் கலக்கட்டும்

சந்தமும் ஜதியும் ஒன்றாய் ஒலிக்கட்டும்

இடியும் மின்னலும்

பூமியின் இருளில் வேகமாய் பாயட்டும்

ஒளியில் அற்புதமான அந்த ஒளியில்

பார்வை பெற்ற பரவசத்தோடு

உணரத் தொடங்கிய உத்வேகத்தோடு

இந்த தேசத்தின் ஒரு சாதாரண மனிதன்

தன்னுடைய உரிமை பற்றி

தன்னுடைய வாழ்க்கை பற்றி

ஆட்சியாளனிடம் கேள்வி கேட்கட்டும்

அவனுடைய கேள்விகளுக்கு

ஆட்சியாளனிடம் பதில் இல்லையென்றால்

அவனுடைய கேள்விகள்

ஆட்சியாளனால் புறக்கணிக்கப்பட்டால்

அந்த சாதாரண மனிதனின் கைகளுக்கு

ஆட்சியே மாற்றப்படட்டும்

அதுவரையிலும்

எங்கு எப்படி என்று

உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும்

உன்னை மீண்டும் சந்திப்பேன் நான்

மீண்டும் மீண்டும் சந்திப்பேன் நான்

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment