கவிஞர் ஜோசப்பை எனக்கு அறிமுகப்படுத்தியது ஒரு ஹைகூ.
சந்திக்கவைத்தது ஒரு கட்டுரை.
நண்பராக்கியது ஒரு திரைப்படம்.
தம்பியாக்கியது ஒரு திரைக்கதை.
கறும்புச்சாற்றிலிருந்து வெல்லமாக அச்செடுப்பதற்கு முன்
அதன் பாகு அருந்துவதற்கு இனிமையாக இருக்கும்.
இனிப்பு ஒன்றுதான்.
வெல்லமாக உண்பதற்கும் பாகாக அருந்துவதற்கும்
வித்தியாசம் இருக்கிறது.
சூட்டிலும்..சுவையிலும்..
கவிதையின் இறுக்கத்தைத் தளர்த்தி, அதன் அடர்த்தி குறையாமல் எளிமையாக, அதே நேரத்தில் காத்திரமாக மொழியைக் கையாள்வதால் தம்பி ஜோசப் எழுதும் கவிதைகளின்
சூடு எனக்குப் பிடிக்கும்.
சுவையும் பிடிக்கும்.
அவரது மொழி சிலசமயம் நம்மைக் கிள்ளி முத்தமிடும்.
சில சமயம் கிள்ள மட்டுமே செய்யும்.
வருடவும் செய்யும்.
வலிக்கவும் வைக்கும்.
அரசியல்,சமூகம்,பாலஸ்தீனம் என்று அவர் எழுதுவதெல்லாம் வலி.
இயற்கை குறித்து காதல் குறித்து அவர் எழுதுவதெல்லாம் வருடல்.
கரும்புக்கூழை அருந்துவது போல
அவரது கவிதைகள் அச்சில் வரும்முன்
சூடாக இணையத்தில் வாசித்துவிடுகிறேன்.
வார்த்தைகளை விடவும் காட்சிகள் முக்கியம்.
கவிதைகளின் வழியே நீங்கள் எழுப்பும் காட்சிகளின் வலிமை
எனக்குப் பிடிக்கிறது.
நாளுக்கு நாள் அந்தப் பிடித்தம் கூடிக்கொண்டே இருக்கிறது.
வாழ்த்துகள் தம்பி.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
செழியன்