திரும்பும் திசைகளெல்லாம் பசுமை பூத்துக் கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், தற்போதைய தென்காசி மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கிறது நான் பிறந்த சிவகிரி என்ற ஊர். எட்டிப்பார்த்தால் எட்டித்தெரியும் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையும், ஊரைச்சுற்றிலும் வெட்டப்பட்டிருக்கும் அழகான கண்மாய்களும், கண்ணைப் பறிக்கும் வயல்வெளிகளும் என என்னுடைய ஊரை நினைத்துப் பார்த்தாலே சில்லென்ற ஒரு உணர்வு தவிர்க்க முடியாதது.
28.08.1982 ஆம் வருடம் ரத்தினசாமி – ஜோதி என்ற கடுமையான உழைப்பாளிகளுக்கு மகனாகப் பிறந்தது பெரும் பாக்கியம். அவர்களின் உழைப்பின் வழி உலகைப் புரிந்து கொண்டது ஏட்டில் எழுதப்படாத பெரும்பாடம். வாழ்விலிருந்து அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது எல்லாவற்றையும் இப்போதும் கூடக் கவிதைகளிலும், கதைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். எட்டாவது படிக்கையில் தொடங்கிய எழுத்து இன்றும் உற்சாகமாய்த் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு அவர்கள் கொடுத்த ஆக்சிஜனும் முக்கியக் காரணம்தான்.
அரசியல் சூழ்ச்சிகளில், சாதிக் கலவரங்களில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தொண்ணூறுகளின் தென்மாவட்ட வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமல்ல, என் வயதொத்த யாருக்குமே கொந்தளிப்பான உணர்வாகத்தான் இருக்க முடியும். சகோதர மனிதர்கள் திடீரென்று ஆவேசம் வந்தவர்களைப் போல ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதை இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது நெஞ்சம். அந்த அச்சம் சமூகமைப்பைப் பற்றி ஏராளமான புரிதல்களைக் கொடுத்தது என்பதுதான் உண்மை.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பிற்காக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டிக்குச் சென்றது, கடுங்கோடையில் மழைபெய்தது போலத்தான் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது இதயத்தில். ஏராளமானவற்றை அள்ளிக்கொடுத்த அந்த மலை, அற்புதமான வாழ்க்கைத் துணைவியையும் கொடுத்தது. கவிதையின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்ட அந்த மலையை, காதலின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்ட அந்த மலையை, ஒரு கூழாங்கல்லைப் போல, அறுத்தெறிய முடியாத ஆணிவேரின் சிறு பகுதியைப் போல என்றென்றும் தழுவிக்கிடக்கவே விரும்புகிறேன் நான்.
காதலின் கொடைகளான, வாழ்வின் பரிசுகளான செல்ல மகள்கள் இருவரும் வீட்டையும், இதயத்தையும் நிறைத்திருப்பது என்னுடைய வார்த்தைகளுக்கு இன்னுங்கூட வலுசேர்த்துக் கொண்டேயிருக்கிறது. சிறகுகள் விரிகின்றன, விரிந்த சிறகுகள் வானத்தை வட்டமிடத் தொடங்குகின்றன.
பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அலுக்காத இந்தச் சென்னையை, இன்றும் கூட அகன்ற விழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாளை ஒரு கூட்டை எங்கு கட்டுவேன் என்ற எந்த முடிவுகளுமற்று உழைக்கவும் ,எழுதவுமாய் உற்சாகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.
ஜோசப் ராஜா
02.01.2023