மலையரசனின் பெருங்கர்வம்

நான் பிறந்த ஊரான

சிவகிரியிலிருந்து

மேற்குத் தொடர்ச்சி மலை

கூப்பிடும் தூரம்தான்

ஒவ்வொரு நாளும்

எங்கள்

சின்னஞ்சிறிய வீட்டின்

மொட்டை மாடியில்

தூங்கி எழுந்து

மலையின் மீதுதான்

கண்விழித்திருக்கிறேன்

பார்க்கப் பார்க்கச்

சலிக்காத மலை

விடுமுறை நாட்களில்

அந்த மலையடிவாரத்தின்

சின்னச்சின்ன அருவிகளும்

சிற்றோடைகளும்

செடிகளைப் போல

கொடிகளைப் போல

மரங்களைப் போல

முளைத்திருக்கும் பாறைகளும்

என்னை

அணைத்துக் கொண்டதை

இப்போதும் நன்றியோடு

நினைத்துப் பார்க்கிறேன்

இதயம் இளகுகிறது

நீரோடைகளின் நடுவில்

சீரான இடைவெளியில்

யானைகள் குளிக்கும்

பள்ளங்கள் இருக்கும்

யானைகளில்லா நேரத்தில்

அதுதான் எங்கள்

நீச்சல் குளம்

இப்போது நினைத்தாலும்

இனிக்கும்

அந்த நீரின் சுவை

இப்போது நினைத்தாலும்

இதமாக இருக்கும்

அந்த மரங்களின் நிழல்

இப்போது நினைத்தாலும்

வழுக்கும்

அந்த மொட்டைப்பாறை

உண்மையைச் சொன்னால்

அப்போது

எனக்குத் தெரியாது

இந்த மலையின்

உச்சியிலிருந்து

ஒரு தேவதையைக்

கண்டெடுப்பேன் என்று

தெரியவே தெரியாது

மலையின் அடிவாரத்தில்

அலைந்து கொண்டிருந்தவனை

அந்தத் தேவதையின் குரல்தான்

உச்சிக்கு அழைத்தது

அந்தக் குரல்வந்த திசையைப்

பற்றிப் பிடித்துக்கொண்டு

செங்குத்தான சிகரங்களில்

சாதரணமாக

ஏறிச்செல்லும் வரையாட்டைப்போல

ஏறிச்சென்றேன் மலைமீது

மலைகளின் அரசியென்று

சும்மாவா சொன்னார்கள்

ஒவ்வொரு சிகரமும்

கம்பீரமாகவும் பேரழகாகவும்

காட்சியளித்துக் கொண்டிருந்தது

பால்யத்தில்

அண்ணாந்து பார்த்த

சிகரங்களில்

பரவசத்தோடு

அலைந்து கொண்டிருக்கிறேன்

அன்று

உயரத்திலிருந்த மேகங்கள்

இன்று

என்னோடுதான்

என்கூடவேதான்

நகர்ந்து கொண்டிருக்கின்றன

அந்த மேகங்களுக்குள்ளிருந்து

விடிந்தும் விடியாத

ஒரு காலைப்பொழுதில்

கருப்பு உடையணிந்து

என்னை நோக்கிவந்த

அந்தத் தேவதையை

முதல் பார்வையிலேயே

முடிவு செய்துவிட்டேன்

வாழ்வு முழுவதும்

வசந்தமாய்

இருக்கப் போகிறவள் என்று

மேகங்களைப் போல

மலையுச்சிகளிலும்

பசும்புல்வெளிகளிலும்

அலைந்து கொண்டிருக்கும்

அந்த மலையின்

தனித்துவமான

வரையாடுகளைப் போல

நாங்களும்

காற்றோடு காற்றாய்

மேகங்களோடு மேகங்களாய்

அந்தச் சிகரங்களிலும்

அந்தப் பள்ளத்தாக்குகளிலும்

அலைந்து திரிந்தோம்

அந்த மலையை

வெறும் கண்களால் அல்ல

காதலின் கண்களால்தான்

உள்ளும் புறமும்

உணர்ந்து கொண்டேன்

அன்றிலிருந்து இன்றுவரையிலும்

அந்த மலையரசியின்

அகலாத அருகாமையும்

அந்த மலையரசியின்

வற்றாத காதலும்

அந்த மலையரசியின்

நிறைந்த கருணையும்

இந்த வாழ்க்கையை

அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது

பல்லுயிர்களின்

தாயாக இருக்கும்

மேற்குத் தொடர்ச்சி மலை

பால்யத்திலிருந்து

இப்போது வரைக்கும்

கொடுத்துக் கொண்டேயிருக்கிறது

பெற்றுக் கொண்டேயிருக்கிறேன்

அந்த மலையிலிருக்கும்

மலையரசியின்

கரம் பற்றிக்கொண்டதால்

நானும்

மலையரசனாக மாறிவிட்டேன்

என்பதில்

இருக்கத்தான் செய்கிறது

பெருங்கர்வம்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment