பாலியல் தொழிலாளியின் பெருங்கருணை

ன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான அழைப்பின் பாடல்கள் 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நூலுக்கு, மதிப்பிற்குரிய ஓவியர் சந்ரு அவர்கள் அற்புதமான முன்னுரை எழுதியிருந்தார்.

நீண்ட சிறைவாசத்திலிருந்த காதலிக்கான காத்திருப்பின் கவிதைகளால் நிறைந்திருந்தது அந்தத் தொகுப்பு. அச்சிலிருந்து புத்தகங்களை வாங்கியவுடன், முதல்பிரதியைக் கொடுப்பதற்காகக் குருநாதரைச் சந்திக்கக் காஞ்சிபுரம் சென்றேன்.

காமாட்சியம்மன் கோவிலின் கொடிமரத்திற்கு எதிரில் கல்தரையில் அமர்ந்திருந்தோம் குருநாதரும் நானும். புத்தகத்தைக் கனிவோடு வாங்கியவர் முன்னுரையை வாசிக்கத் தொடங்கினார். வாசித்துக் கொண்டிருந்தவர் உறைந்துபோனதைப்போல சிறிதுநேரம் அப்படியே இருந்தார். என்னை நிமிரிந்து பார்த்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.

எதுவும் பேசாமல் இருவரும் சிறிதுநேரம் கொடிமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதயத்தைக் கலங்கச்செய்த அந்த வரியை நடுங்கும் தன் விரல்களால் தொட்டுக்காட்டினார்.

“காதலிக்க நேரமில்லை என்று சொல்கிறாள் பாலியல் தொழிலாளி” என்பதுதான் அந்த வரி. குருநாதரின் உணர்வுகள் என்னையும் ஆட்கொண்டதில் நானும் உறைந்துதான் போயிருந்தேன்.

கொடிமரத்தையும், கொடிமரத்தை விழுந்து வணங்கியவர்களையும் கண்கள்தான் பார்த்துக் கொண்டிருந்ததே ஒழிய, எண்ணங்களோ ஓவியரின் வார்த்தைகளுக்குள் அர்த்தம்தேடி அலைந்து கொண்டிருந்தன.

நீண்டநேர மெளனம் கலைத்த குருநாதர், “ஜோசப் சந்ரு சார்க்கு ஒரு போன் பண்ணி ரெண்டுவார்த்த பேசுங்களேன், கொஞ்சநேரம் அவர் குரலை கேட்டுக்கிறேன்” என்றார்.

“நல்லாயிருக்கீங்களா ஜோசப்” என்ற தகப்பனின் வாஞ்சையோடு தொடங்கிய சந்ரு ஐயாவிற்கும் எனக்குமான தொலைபேசி உரையாடலைக் கொஞ்சம் தள்ளிநின்று உவகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் குருநாதர். இத்தனைக்கும் அவர்தான் சந்ரு ஐயாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர்.

மீண்டும் “காதலிக்க நேரமில்லை என்று சொல்கிறாள் பாலியல் தொழிலாளி” என்ற வரியை சத்தமாக வாசித்தார் குருநாதர். “மானுட துயரத்தையும், வலியையும் ஒரு கலைஞனின் இதயம் மட்டுமே கச்சிதமாகப் படம்பிடிக்க முடியும் ஜோசப். இந்த வரியும் அப்படிப்பட்டதுதான்” என்றார் அழுத்தமாக.

சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியபோதே பாலியல் தொழிலாளிகளையும் புரிந்துகொண்டேன் என்றாலும், அந்தக் காமாட்சி அம்மன் கோவிலில் குருநாதர் உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அந்தப் புரிதலை ஆழப்படுத்தின.

மூன்று வருடங்களுக்கு முன்னால் பெருந்தொற்று உலகத்தையே பிடித்தாட்டிக் கொண்டிருந்த போது, உலகம் முழுக்க ஒரேமாதிரிப் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் தொழிலாளிகள்தான்.

யாருமில்லாமல் யாரும் வராமல் பசியோடு பசியோடு கடத்திக் கொண்டிருந்தார்கள் ஒவ்வொரு நாட்களையும். அவர்களைப்பற்றிய செய்திகளை வாசிக்கும் போதெல்லாம் சந்ரு ஐயாவின் அந்த வரியும், குருநாதரின் அந்த வியப்புமே நினைவில் எழுந்துவரும்.

இப்போதென்ன என்று கேட்கிறீர்களா?

மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரமான நிகழ்வை ஒட்டி நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களைப் பார்த்திருப்பீர்கள். நடக்கும் அற்பத்தனமான அரசியலையும் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், நிகழ்ந்த அந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு எதிராக, பாலியல் தொழிலாளி ஒருவர் பேசியதைப் பார்த்தேன்.

இந்தக் கேவலமான மானிடர்களின் அற்பத்தனங்களையும், கீழ்மையையும், அசிங்கங்களையும் இரத்தமும் சதையுமாக பார்க்க நேர்ந்த பிறகும் அவளால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது?

அந்தப் பாலியல் தொழிலாளியின் சொற்கள் இவைகள்தான், “பாலியல் வெறிபிடித்தவர்களே, மிருகங்களே வாருங்கள் எங்களிடம், பிஞ்சுக் குழந்தைகளையும், அப்பாவிப் பெண்களையும் சிதைப்பதை விட்டுவிடுங்கள்”.

இந்தப் பெருங்கருணைமிக்க வார்த்தைகளுக்கு சொந்தமான பரந்த இதயத்தை இந்நேரம் வாரியணைத்துக் கொள்ளவே விரும்புகிறேன் நான்.

மட்டுமல்லாமல் இதற்கு இணையாக இன்னொரு தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளும் எங்கிருந்தோ எனக்கு கேட்கத் தொடங்குகிறது. “வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று.

இப்போது புரிந்துகொள்கிறேன் இன்னும். காதலிக்கத்தான் நேரமில்லை பாலியல் தொழிலாளிக்கு, ஆனால் காதல் இதயம் நிறைய நிறைய இருக்கிறது என்று.

ஆனாலும் அன்பர்களே, காதலிக்க நேரமில்லாத பாலியல் தொழிலும், காதலுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களும் அடியோடு ஒழியும் காலத்திற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment